November 4, 2022 தண்டோரா குழு
கோவை-மேட்டுப்பாளையம் சாலையில் பெரியநாயக்கன்பாளையம் பகுதியில் மந்த கதியில் மேம்பால பணி நடைபெறுவதால் மக்கள் கடும் அவதியடைந்து வருகின்றனர்.
கோவை-மேட்டுப்பாளையம் சாலையில் பெரியநாயக்கன்பாளையத்தில் ராமகிருஷ்ண மிஷன் வித்யாலயா முதல் சாமிசெட்டிபாளையம் பிரிவு வரை 1. 4 கிலோ மீட்டர் நீளத்துக்கு, சுமார் ரூ.115 கோடி மதிப்பில் மேம்பாலம் கட்டுமான பணி துவங்கி நடைபெற்று வருகிறது. இதில், எல்.எம்.டபிள்யூ பிரிவு பகுதியில் இருந்து சாமிசெட்டிபாளையம் வரை தூண்கள் அமைக்கும் பணி, வேகமாக நடந்து தூண்கள் அமைக்கப்பட்டுள்ளது.ஆனால் தூண்களுக்கு இடையே கான்கீரிட் அமைக்கும் பணி மந்த கதியில் நடந்து வருகிறது.
இதனிடையே தூண்கள் அமைக்க தோண்டப்பட்ட சாலைகள் சில இடங்களில் போடப்பட்டுள்ளது. சில இடங்களில் போடப்படாமல் உள்ளது. அதே போல் மேம்பால பணிகளும் அலட்சியமாக நடைபெற்று வருகிறது என மக்கள் குற்றம் சாட்டுகின்றனர். மேலும் மேம்பால பணிகள் காரணமாக பெரியநாயக்கன்பாளையம் பகுதி வழியாக மேட்டுப்பாளையம் செல்வதற்கும், மேட்டுப்பாளையத்தில் இருந்து வரும்போது ஜோதிபுரம் வழியாக கோவை செல்வதற்கும் மாற்று வழி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மாற்றுவழி பாதையும் முன் ஏற்பாடுகள் செய்யப்படாமல் வாகனங்கள் திருப்பி விடப்படுகின்றன.
மாற்று பாதைகளில் குறுகிய சாலைகள் விரிவாக்கம் செய்யப்படவில்லை. மாற்று பாதையில் வாகன போக்குவரத்து அதிகரித்ததால் சாலைகள் முழுவதும் சேதமடைந்துள்ளன. சுமார் ஒர் ஆண்டுக்கும் மேலாக சாலை சேதமடைந்துள்ளது. சேதமான சாலைகள் தற்போது வரை சீர்செய்யப்படவில்லை. இதனால் போக்குவரத்து நெரிசல் அதிகரித்துள்ளது. மழை காலங்களில் சாலைகள் சேறும், சகதியுமாக மாறுகின்றன என அப்பகுதி மக்கள் வேதனை தெரிவிக்கின்றனர். ‘
இதுகுறித்து அப்பகுதி மக்கள் கூறுகையில்,
‘‘பெரியநாயக்கன்பாளையம் மேம்பால பணிகள் தொடர்ந்து மந்த கதியில் நடைபெற்று வருகிறது. ஊர்களுக்குள் செல்லும் மாற்றுப்பாதைகளில் பல இடங்களில் சாலை முற்றிலும் சேதமடைந்து குண்டும் குழியுமாக உள்ளது. இதனால் வாகனங்கள் செல்லும் போது புழுதி காற்று பரக்கிறது. மழை நேரங்களில் குண்டும் குழியுமான சாலைகளில் தண்ணீர் தேங்கி வாகனங்கள் அதில் சிக்கி விபத்து ஏற்படுகிறது. மேம்பால பணிகள் மேற்கொள்ளும் போது மேற்கொள்ள வேண்டிய பாதுகாப்பு நடவடிக்கைகள் எதுவும் மேற்கொள்ளவில்லை. உயர் அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டு கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்,’’ என்றனர்.
இது குறித்து நெடுஞ்சாலைத்துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது:
பெரியநாயக்கன்பாளையம் மேம்பால பணிகள் வேகமாக நடைபெற்று வருகிறது. குறிப்பாக பல்வேறு போக்குவரத்து இடையூறுகளுக்கு மத்தியில் மிகவும் வேகமாக நடந்து வருகிறது. தூண்களின் மீது ரேம்ப் வைக்கும் பணிகளின்போது சாலைகள் அடைக்கப்படுகின்றன. ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணி நிறைவடைந்துள்ளது. விரைவில் சர்வீஸ் சாலைகள் உடனடியாக போடப்படும். மாற்றுபாதைகளில் உள்ள சாலைகள் நெடுஞ்சாலைத்துறையினர் கட்டுப்பாட்டில் வராது. இவ்வாறு அவர் கூறினார்.
யானைகள் நடமாடும் பகுதிக்கு செல்லும் வாகனங்கள்
கோவை-மேட்டுப்பாளையம் சாலை ஊட்டி மற்றும் கார்நாடக மாநிலங்களுக்கு செல்லக்கூடிய முக்கியமான தேசிய நெடுஞ்சாலை என்பதால் வாகன போக்குவரத்து அதில் அதிகரித்து காணப்படும். உள்ளூர் வாகன ஒட்டிகளுக்கு ஊருக்குள் செல்லும் வழி தெரியும் என்பதால் மாற்றுப்பாதைகளில் எளிதாக சென்றுவிடுகின்றனர். ஆனால் பல்வேறு மாவட்டங்கள் மற்றும் மாநிலங்களில் வரும் வாகன ஒட்டிகளுக்கு மாற்றுப்பாதைக்கான அறிவிப்பு பலகைகள் முறையாக வைக்கப்படாததால் வழிமாறி செல்லும் நிலை உள்ளது. இரவு நேரங்களில் குடும்பத்தினருடன் வரும் வாகன ஒட்டிகள் பலரும் அறிவிப்பு மற்றும் தகவல் பலகை இல்லாததால் வழிமாறி சென்று சிக்கி தவித்து வருகின்றனர். குறிப்பாக பெரியநாயக்கன்பாளையம் அருகில் உள்ள யானைகள் நடமாட்டம் உள்ள பாலமலை வழியில் சென்று சிக்கி தவிப்பவர்கள் மிகவும் அவதியடைந்து வருகின்றனர். பின்னர் உள்ளூர் வாசிகளிடம் வழிகள் கேட்டு செல்கின்றனர்.