March 10, 2017 தண்டோரா குழு
கோவை சத்தி சாலையில் மனநிலை பாதித்த நிலையில் காணப்பட்ட பெண்ணை மீட்ட ‘ஈர நெஞ்சம்’ அறக்கட்டளை அவரை கோவை அரசு மருத்துவமனையில் சேர்த்துள்ளது.
கோவை சத்தி சாலை விளாங்குறிச்சி பகுதியில் 35 வயது மதிக்கத்தக்க ஒரு பெண் ஆடை கிழிந்த நிலையில் வெள்ளியன்று காலையில் நடந்து சென்று கொண்டிருந்தார். அதைப் பார்த்த இந்திய பப்ளிக் பள்ளியைச் சேர்ந்த மாணவர்கள் மாநகராட்சி அதிகாரிகளுக்குத் தகவல் தெரிவித்தனர். மாநகராட்சி அதிகாரிகள் மூலம் ‘ஈர நெஞ்சம்’ அறக்கட்டளைக்குத் தகவல் கிடைத்துள்ளது.
அதையடுத்து, அங்கு சென்ற ‘ஈர நெஞ்சம்’ நிறுவனர் மகேந்திரன் நண்பர்களின் உதவியுடன் அப்பெண்னை மீட்டு, கோவை அரசு மருத்துவமனையில் சேர்த்துள்ளார்.இது குறித்து மகேந்திரன் கூறும்போது, “மனநலம் பாதிக்கப்பட்ட நிலையில் இருந்த அப்பெண் வடமாநிலத்தை சேர்ந்தவர். அவரது பெயரைக் கூட அவரால் சொல்ல முடியாமல் இந்தியில் பேசி வருகிறார். இப்போதைக்கு அவருக்குச் சிகிச்சை தேவைப்பட்டதால், அவரை மீட்டு நாங்கள் கோவை அரசு மருத்துவமனையில் சேர்த்துள்ளோம். அவர் குணமடைந்தால் எங்கள் அறக்கட்டளையில் அவரைச் சேர்த்து பாராமரிப்போம்” என்றார்.