June 27, 2017 தண்டோரா குழு
மனித கழிவுகளை அகற்றும் பணிக்கு இயந்திரத்தை பயன்படுத்திக்கொள்ள வேண்டும்,இயந்திரங்கள் இல்லையெனில் அரசுக்கு அறிக்கை அனுப்பி இயந்திரங்களை பெற்றுக்கொள்ள வேண்டும் என்று தேசிய தாழ்த்தப்பட்டோர் நல ஆணைய துணைத்தலைவர் முருகன் கூறியுள்ளார்.
கோவை மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலகத்தில், தாழ்த்தப்பட்டோர்களுக்கு மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் வழங்கப்பட்டுள்ள நலத்திட்ட உதவிகள் குறித்துஆய்வு கூட்டம் நடைபெற்றது.
இதில் புதுதில்லி தேசிய தாழ்த்தப்பட்டோர் நல ஆணைய துணைத்தலைவர் முருகன் மற்றும் கோவை மாவட்ட ஆட்சித்தலைவர் ஹரிஹரன் ஆகியோர் கலந்துகொண்டனர்.
கூட்டத்தில் முருகன் பேசியதாவது:
“இந்திய அரசியலமைப்பு சட்டத்தின்படி தாழ்த்தப்பட்டோர்களுக்கு அரசால் வழங்கப்படும் சலுகைகள், அறிவிக்கப்படும் திட்டங்களை உரிய முறையில் கொண்டு சேர்ப்பது அரசுத்துறை அலுவலர்களது முக்கிய பங்கு ஆகும்.
தனியார் மற்றும் அரசுப்பள்ளிகளில் தாழ்த்தப்பட்ட பிரிவைச்சார்ந்த பதினொன்றாம் வகுப்பு மாணவ, மாணவியர்கள் கோரப்படும் குரூப்களை அவர்களது விருப்பத்திற்கேற்ப வழங்கப்படுதல் வேண்டும்.
அதேபோல், அரசு விடுதிகளில் தங்கி படிக்கும் மாணவர்களுக்கு அடிப்படை வசதிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளனவாஎன அடிக்கடி மாவட்டத்தில் உள்ள அரசு உயர் அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டு தேவைப்படும் வசதிகள் குறித்து அரசுக்கு அறிக்கை அனுப்பி அடிப்படை வசதிகள் பெற்று தருவதில் முனைப்பாக செயல்பட வேண்டும்.
மனித கழிவுகளை அகற்றும் பணிக்கு கூடுமானவரை இயந்திரத்தை பயன்படுத்திக்கொள்ள வேண்டும். போதிய இயந்திரங்கள் இல்லையெனில் அரசுக்கு அறிக்கை அனுப்பி தேவைப்படும் இயந்திரங்களை பெற்றுக்கொள்ள முயற்சி மேற்கொள்ள வேண்டும்.
பாரத பிரதமரின் யோஜனா திட்டத்தின் கீழ் வழங்கப்படும் தொகுப்பு வீடுகள் தகுதியுடைய மக்களுக்குதான் சென்றடைகின்றதா எனவும், வழங்கப்பட்ட பின் அவ்வீட்டின் உரிமையாளர்தான் வசீக்கின்றாராஎன அவ்வப்போது ஆய்வு செய்தல் வேண்டும்.
தாட்கோ வாயிலாக வழங்கும் கடன் உதவிகள் உரிய நபருக்கு உரிய நேரத்தில் வழங்கப்படுதல் வேண்டும். முன்னோடி வங்கியின் மேலாளர் அவர்களிடம் வழங்கப்படும் விண்ணப்பத்தில் சான்றிதழ் ஏதும் விடுபட்டு இருந்தால் விண்ணப்பதாரரை உடனடியாக தொடர்பு கொண்டு உரிய சான்றிதழ் பெற்றுக்கொண்டு காலம் தாழ்த்தாமல் கடன் உதவிகள் பெற்றுத்தர வேண்டும்.
வெளி மாநிலத்திலிருந்து வேலை தேடி வந்துள்ள மற்றும் வேலை செய்து வரும் தொழிலாளர்களின் விவரங்கள் காவல் நிலையங்களில் இருத்தல் அவசியம் ஆனதாகும். அத்தொழிலாளர்களின் குழந்தைகளது படிப்பு எவ்விதத்திலும் தடைபடாதவாறு அரசு பள்ளிகளில் சேர்த்திட நடவடிக்கை எடுத்தல் வேண்டும்.
கலப்புத்திருமணம் செய்திடும் மணமக்களுக்கு வழங்கப்படும் நல உதவிகள் மற்றும் அரசிடமிருந்து கிடைக்கப்பெறும் சலுகைகளை காலம் தாழ்த்தாமல் வழங்கிட வேண்டும்.”
இவ்வாறு அவர் பேசினார்.