April 6, 2017 தண்டோரா குழு
தன் மனைவி அடிக்கடி தாலியை கழட்டி வைப்பதால் விவாகரத்து கோரி கணவர் தாக்கல் செய்த மனுவை மும்பை நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.
மும்பையை சேர்ந்த நபர் ஒருவர் உயர்நீதிமன்றத்தில் தன் மனைவியை விவாகரத்து செய்வதாக கோரி மனு தாக்கல் செய்தார். அம்மனுவில், தன்னுடைய மனைவி அடிக்கடி தாலியை கழட்டி வைப்பதாகவும், குங்குமம் வைத்துக்கொள்ள மறுப்பதோடு தலையில் முந்தானையைக் கொண்டு மூட மறுக்கிறார் என குறிப்பிட்டுள்ளார். ஆகையால், மனைவியுடன் சேர்ந்து வாழ விரும்பவில்லை எனவும் இதனால் தனக்கு விவாகரத்து வழங்க வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டார்.
இந்நிலையில் இவ்வழக்கை உயர்நீதிமன்ற நீதிபதிகள், வசந்தி நாயக் மற்றும் தேஷ்பாண்டே ஆகியோர் விசாரித்தனர். அப்போது, இதுபோன்ற கலாச்சார ரீதியான வழக்கத்தை பெண்கள் பின்பற்ற வேண்டும் என்று நிர்பந்திக்கக்கூடாது. தாலி கட்டிக்கொள்வதும், குங்குமம் வைத்துக்கொள்வதும், முந்தானையை வைத்து தலையை மூடுவதெல்லாம் பெண்களின் தனிப்பட்ட விருப்பத்தை சார்ந்தது.21-ம் நூற்றாண்டில் இதுபோன்ற பிரச்சனைகளுக்கெல்லாம் விவாகரத்து கேட்பத்தை ஏற்றுக்கொள்ள முடியாது என்று கூறி, வழக்கை தள்ளுபடி செய்தனர். மேலும், இந்திய சட்டப்படி கலாச்சார ரீதியான சடங்குகளை பின்பற்ற, யாரும் யாரையும் நிர்பந்திக்கூடாது எனவும் நீதிபதிகள் மேற்கோள் காட்டினர்.