September 16, 2024 தண்டோரா குழு
காவேரி கூக்குரல் இயக்கம் சார்பில் ‘மரம் தங்கசாமி அவர்களின் நினைவு தினத்தை’ முன்னிட்டு இன்று (16/09/2024) தமிழகம் முழுவதும் 1,67,828 மரக்கன்றுகள் விவசாய நிலங்களில் நடப்பட்டது.
புதுக்கோட்டை மாவட்டத்தைச் சேர்ந்த மரம் தங்கசாமி அவர்கள், மரங்கள் வளர்ப்பதில் பலருக்கு முன் மாதிரியாகவும், முன்னோடியாகவும் திகழ்ந்தவர் மரம் சார்ந்த விவசாயம் குறித்து விவசாயிகளுக்கு எடுத்துக் கூறி மாவட்டத்தையே பசுஞ்சோலையாக மாற்றியவர்.மேலும் ஈஷாவின் பசுமைக் கரங்கள் திட்டத்துடன் இணைந்து செயல் புரிந்தவர்.
ஈஷா காவேரி கூக்குரல் இயக்கம் மரம் தங்கசாமி அவர்களின் சுற்றுச்சூழல் பணியை நினைவு கூறும் வகையில் ஆண்டுதோறும் அவரின் நினைவு நாளில் மரக் கன்றுகள் நடும் பணியை முன்னெடுத்து வருகிறது.அந்த வகையில் இந்தாண்டு நினைவு தினத்தில் தமிழகத்தில் 37 மாவட்டங்களில்,86 விவசாய நிலங்கள் தேர்வு செய்யப்பட்டு,691 ஏக்கரில் மொத்தம் 1,67,828 மரக்கன்றுகள் நடப்பட்டது.
மேலும் மரம் தங்கசாமி அவர்களின் கனவை நிறைவேற்றும் வகையில் மரம் சார்ந்த விவசாயம் செய்ய விவசாயிகளுக்கு பக்கபலமாக காவேரி கூக்குரல் இயக்கம் செயல்பட்டு வருகிறது.
ஈஷா சார்பாக இதுவரை விவசாயிகளுக்கு 11 கோடி மரங்கள் விநியோகிக்கப்பட்டுள்ளது.கடந்த ஆண்டு தமிழகத்தில் 1.12 கோடி மரங்கள் நடப்பட்டுள்ளது, இந்த ஆண்டு தமிழகத்தில் 1.21 கோடி மரங்கள் நடுவதற்கு இலக்கு நிர்ணயிக்கப்பட்டு, இதுவரை 47.35 லட்சம் மரங்கள் விநியோகிக்கப்பட்டுள்ளது.
சுற்றுச்சுழலுடன் சேர்ந்து விவசாயிகளின் பொருளாதாரமும் மேம்படும் வகையில் தேக்கு, மலைவேம்பு, கருமருது, வேங்கை, மஞ்சள் கடம்பு, சந்தனம், செஞ்சந்தனம், குமிழ், மகாகனி போன்ற விலைமதிப்பு மிக்க டிம்பர் மரங்களை ரூ.3/-க்கு வழங்கி வருகிறது.இது போன்ற விலைமதிப்பு மிக்க டிம்பர் மரங்களை விவசாய நிலங்களில் நட்டு வளர்ப்பதன் மூலம் விவசாயிகளின் வருமானம் அதிகரிக்கும். அதுமட்டுமின்றி மரங்களுக்கிடையே ஊடுபயிர் செய்து அதன் மூலமும் வருமானமும் பெறலாம்.
மேலும் மரங்களுக்கிடையே நறுமணப் பயிர்களான ஜாதிக்காய் முதலான மரங்களையும் சாகுபடி செய்வதன் மூலம் கூடுதல் வருமானம் ஈட்டலாம். இதுமட்டுமின்றி காவேரி கூக்குரல் இயக்கம் விவசாயிகளுக்கு பயன் அளிக்கும் வகையில் உணவுக்காடு வளர்ப்பு, பழங்கள் மதிப்புக்கூட்டுதல், மசாலா மற்றும் நறுமணப்பயிர் சாகுபடி போன்ற பல்வேறு பயிற்சிகளை நடத்திவருகிறது. இதன் மூலம் விவசாயிகள் தொழில்நுட்ப அறிவையும், வருமானத்தை அதிகரிக்கும் வழிமுறைகளையும் கற்றுக்கொள்கின்றனர்.
வரும் டிசம்பர் 22 அன்று “மரங்களுக்கு இடையே விவசாயம்! மகத்தான வருமானம்!” என்ற சிறப்பு கருத்தரங்கத்தை காவேரி கூக்குரல் ஏற்பாடு செய்துள்ளது. இதில் விவசாயிகள் கலந்துகொண்டு டிம்பர் மரங்களுடன் ஊடுபயிர்களை சாகுபடி செய்யும் உத்திகள் குறித்து தெரிந்து கொள்ளலாம். மேலும் டிம்பர் மரக்கன்றுகளை பெறவும், பயிற்சிகளில் பங்கேற்கவும் 80009 80009 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளவும்.