September 21, 2022 தண்டோரா குழு
கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் தமிழக சட்டமன்ற பேரவையின் அரசு உறுதிமொழிக்குழுவின் தலைவரும், சங்கராபுரம் எம்.எல்.ஏ. உதயசூரியன் தலைமையில் அனைத்து துறை அலுவலர்களுக்கான ஆய்வு கூட்டம் நடைபெற்றது.
இக்கூட்டத்தில் தமிழக சட்டமன்ற பேரவையின் அரசு உறுதிமொழிக்குழு உறுப்பினர்களும், எம்.எல்.ஏ.க்களுமான அம்பேத்குமார் (வந்தவாசி), அர்ஜூனன் (திண்டிவனம்), கே.ஆர்.ஜெயராம் (சிங்காநல்லூர்), செயலாளர் சீனிவாசன், கலெக்டர் சமீரன், இணைச்செயலாளர் கருணாநிதி, மாநகராட்சி மேயர் கல்பனா ஆனந்தகுமார், மாநகராட்சி கமிஷனர் பிரதாப் உட்பட அரசு அலுவலர்கள், எம்.எல்.ஏ.க்கள் பலர் கலந்துகொண்டனர்.
முன்னதாக, கோவை பாரதியார் பல்கலைக்கழகத்தில் ரூ.2 கோடி மதிப்பீட்டில் ஆராய்ச்சி மற்றும் தொழில்நுட்ப மேம்பாட்டு மையம் அமைக்கப்பட்டுள்ளதையும், ரூ.20 கோடி மதிப்பீட்டில் நூலகம் மற்றும் உயிர் அறிவியல் துறைகளுக்கு புதிய கட்டடம் கட்டுமான பணிகளையும், தமிழக சட்டமன்ற பேரவையின் அரசு உறுதிமொழிக்குழுவின் தலைவர் உதயசூரியன் தலைமையிலான குழு நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டனர்.
இதனைத்தொடர்ந்து கோவையில் ரூ.3.10 கோடி மதிப்பீட்டில் மாதிரி தீயணைப்பு நிலைய கட்டடம் கட்டும் பணியினையும், அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் ரூ.1.50 கோடி மதிப்பிட்டில் கட்டப்பட்டுள்ள 48 படுக்கைகள் கொண்ட பச்சிளம் குழந்தைகள் தீவிர சிகிச்சை பிரிவு, எஸ்.ஐ.எச்.எஸ் காலனியில் மேம்பால பணியினையும், நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டனர். மேலும், முடிவுறாத பணிகளை விரைவில் முடிக்க நடவடிக்கை எடுக்குமாறு சம்மந்தப்பட்ட அலுவலர்களுக்கு இக்குழுவினர் அறிவுறுத்தினர்.
பின்னர் தமிழக சட்டமன்ற பேரவையின் அரசு உறுதிமொழிக்குழுவின் தலைவர் நிருபர்களிடம் கூறியதாவது:
தமிழக சட்டப்பேரவையில் பல்வேறு குழுக்கள் உள்ளது. இக்குழுக்களில் சட்டமன்ற உறுதிமொழிக்குழு முக்கியமான குழுவாகும். சட்டமன்றத்தில் சட்டமன்ற உறுப்பினர் அவர்களுடைய தொகுதிக்கான சாலைவசதி, பள்ளிகள், கல்லூரிகள் உள்ளிட்ட அடிப்படை தேவைகளுக்கான பல்வேறு கோரிக்கையினை வைப்பார்கள். சட்டமன்ற உறுப்பினர்களின் கோரிக்கைகளை ஏற்றுக்கொண்டு சம்மந்தப்பட்ட துறை அமைச்சர்கள் உறுதியளித்த பல்வேறு திட்டங்களின் செயல்பாடுகள் தொடர்பாக அரசு உறுதிமொழிக்குழு ஆய்வு மேற்கொள்ளும்.
அதன்படி, கோவை மாவட்டத்தில் பல்வேறு அரசு துறைகளின் மூலம் உறுதியளிக்கப்பட்ட 219 கோரிக்கைகள் மீது அரசு உறுதி மொழிக்குழு ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. 59 கோரிக்கைகள் நிறைவேற்றப்பட்டுள்ளன. 25 கோரிக்கைகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. திட்டப்பணிகள் நடைபெற்று வருவது, சில பணிகளுக்கு இடம் தேர்வு செய்தல் உள்ளிட்ட 135 உறுதிமொழிகள் நிலுவையில் உள்ளது.கோவை மாவட்டம் மருதமலை கோயிலில் ரூ.3 கோடி மதிப்பில் லிப்ட் (மின்தூக்கி) அமைக்க அறிவிப்பு வெளியிடப்பட்டது. தற்போது மறுமதிப்பீடு செய்யப்பட்டு ரூ.5.5 கோடி மதிப்பீட்டில் இரண்டு லிப்ட் அமைக்கும் பணி நடைபெறவுள்ளது.
பாரதியார் பல்கலைக்கழகத்தில் நூலகம், ஆராய்ச்சி மையம் உள்ளிட்ட 7 கோரிக்கைகள் ஆய்வு செய்யப்பட்டது. இப்பணிகளுக்கு 50 சதவீதம் பல்கலைக்கழகமும், 50 சதவீதம் நபார்டு மூலம் நிதிஒதுக்கீடு கோரிக்கை வைக்கப்பட்டது. இது தொடர்பாக துறைச் செயலாளருக்கு தலைவருக்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.
கோவையில் தீயணைப்புத் துறை இணை இயக்குநர் குடியிருப்பு வேண்டி கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. இக்குழு தீயணைப்புத் துறைக்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. குறைவான எடையுடன் பிறக்கும் குழந்தைகளை ஐசியூவில் வைத்து பாதுகாத்து அவர்களுக்கு சிகிச்சை அளிக்கும் வகையில், அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் ரூ.1.50 கோடி மதிப்பிட்டில் கட்டப்பட்டுள்ள 48 படுக்கைகள் கொண்ட பச்சிளம் குழந்தைகள் தீவிர சிகிச்சை பிரிவு கட்டப்பட்டுள்ளது.
பாரதியார் பல்கலைக்கழகத்தில் பாரதியின் நூல்களை பல மொழிகளிலும் மொழிப்பெயர்த்து வெளியிடவேண்டும் என துணைவேந்தருக்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் உள்ள ஒவ்வொரு பல்கலைக்கழகத்திலும் ஆராய்ச்சி படிப்பு படிக்கும் மாணக்கர்கள், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர், மலைவாழ் பகுதிகளை சேர்ந்த மாணக்கர்கள் படிக்கும் 10 பள்ளிக்கூடங்களை தேர்வு செய்து கல்வி உபகரணங்கள், அறிவுத்திறன் பெருக்குவதற்கு பயிற்சி வழங்கவேண்டும் என இந்த குழுவின் சார்பில் அரசுக்கு பரிந்துரைக்கப்படுகிறது.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.