December 31, 2021 தண்டோரா குழு
தமிழகத்தில் இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டின் கீழ் 30 ஆயிரத்து 627 கோவில்கள் உள்ளன. இந்தநிலையில் கோவிலுக்கு வரும் பக்தர்களின் வசதிக்காக பல்வேறு நடவடிக்கைகளை தொடர்ந்து தமிழக அரசு மேற்கொண்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக பிரபலமான 10 கோவில்களில் 10 கோடி ரூபாய் மதிப்பீட்டில் மருத்துவ மையத்தை வெள்ளியன்று முதலமைச்சர் மு.க ஸ்டாலின் சென்னை தலைமைச் செயலகத்தில் இருந்து காணொலி காட்சி மூலம் திறந்து வைத்தார்.
இதன்தொடர்ச்சியாக கோவை மாவட்டத்தில் அமைந்துள்ள மருதமலை சுப்பிரமணியசுவாமி கோவில் மருத்துவ மையத்தை முதலமைச்சர் ஸ்டாலின் காணொலி காட்சி வாயிலாக திறந்துவைத்தார்.இதில் கோவை மாவட்ட ஆட்சியர் ஜி.எஸ்.சமீரன், கோவை நாடாளுமன்ற உறுப்பினர் பி.ஆர்.நடராஜன் மற்றும் இந்து சமய அறநிலையத் துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர். இதனைத் தொடர்ந்து மருத்துவ மையத்தை பார்வையிட்டு அங்கு பணியாற்ற உள்ள மருத்துவர்கள் செவிலியர்கள் மற்றும் மருத்துவ பணியாளர்கள் அளிக்கப்படும் சிகிச்சை குறித்தும் மேற்கொள்ளப்பட உள்ள பணிகள் குறித்தும் ஆய்வு மேற்கொண்டனர்.
இந்த மருத்துவ மையத்தில் இரண்டு மருத்துவர்கள் இரண்டு செவிலியர்கள் இரண்டு பல்நோக்கு மருத்துவ பணியாளர்கள் பணியாற்ற உள்ளனர் இவர்கள் அனைவரும் சுழற்சிமுறையில் பணியாற்ற உள்ளனர் இந்த மருத்துவ மையத்தில் ஆக்சிஜன் சிலிண்டர்கள் மற்றும் அடிப்படை மருத்துவ உபகரணங்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.