March 10, 2017 தண்டோரா குழு
வயிற்று வலி காரணமாக தில்லி மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட ஆப்கானிஸ்தான் நபரின் வயிற்றில் போதைப் பொருள் பதுக்கி கடத்தி வரப்பட்டது தெரியவந்துள்ளது. இதையடுத்து, அந்த நபர் சிகிச்சைக்குப் பின்னர் கைது செய்யப்பட்டார்.
தில்லி மெட்ரோ ஹாஸ்பிடல்ஸ் மருத்துவமனையில் கடந்த பிப்ரவரி 28ம் தேதி ஆப்கானிஸ்தானைச் சேர்ந்த அப்துல் அலி (55) என்பவர் வயிற்று வலி காரணமாக சேர்க்கப்பட்டார். அப்போது அவர் நினைவிழந்த நிலையில் இருந்தார்.
டாக்டர்கள் அவரைப் பரிசோதித்துப் பார்த்தபோது, வயிற்றில் ஏதாவது பொருள் இருந்திருக்கும் என்று கண்டறிந்து மார்ச் 2ம் தேதி அவருக்கு அறுவைச் சிகிச்சை செய்தனர். அப்போது, வயிற்றினுள் பாலிதீன் பை இருந்ததைக் கண்டறிந்து, வெளியே எடுத்தனர்.
சந்தேகத்தின் பேரில் போலீசாரிடம் அதைக் கொடுத்தனர். போலீசாரும், போதைப் பொருள் தடுப்புப் பிரிவினரும் அந்தப் பைக்குள் இருந்த வெள்ளைப் பொடியைச் சோதித்ததில், அது ஹெராயீன் எனப்படும் போதைப் பொருள் எனத் தெரியவந்தது.
சிகிச்சை முடிந்து மயக்கநிலையில் இருந்து விழித்தபிறகு போலீசார் அந்த நபரிடம் விசாரணை நடத்தினர். ஆனால், அவருக்கு ஆங்கிலம் தெரியவில்லை. ஆப்கன் நாட்டின் உள்ளூர் மொழியில் பேசினார். எனினும், ஆம் இல்லை என்ற இரு சொற்களை மட்டுமே ஆங்கிலத்தில் பேசினார்.
அவரிடம் புலனாய்வுத் துறையினரும் போலீசாரும் விசாரணை நடத்தி, அவரிடமிருந்த கைபேசியைக் கைப்பற்றி, அதில் பதிவான எண்களை வைத்து புலன் விசாரணை நடத்தினர்.குறிப்பிட்ட சில எண்களை அழைத்தபோது ஒரு தில்லி முகவரி தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால், அந்த முகவரிகள் போலியானவை எனத் தெரிந்தது. தொடர்ந்து புலன் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.