March 21, 2017 தண்டோரா குழு
மருத்துவ அறிக்கை தனுஷுக்கு சாதகமாகவே உள்ளதாக தனுஷின் வழக்குரைஞர் கூறியுள்ளார்.தனுஷை தங்களது மகன் என்று உரிமை கோரி மேலூர் தம்பதியர் தாக்கல் செய்த வழக்கை விசாரித்த நீதிமன்றம், மேலூர் தம்பதியர் குறிப்பிட்டுள்ள அங்க அடையாளங்கள் தனுஷின் உடலில் உள்ளனவா என்ற சோதனையிட அவரை நேரில் ஆஜராக உத்தரவிட்டிருந்தது. இதன்படி விசாரணைக்கு ஆஜரான தனுஷின் உடலில் மேலூர் தம்பதியர் குறிப்பிட்ட அங்க அடையாளங்கள் உள்ளதா என்பதை நீதிபதியின் உத்தரவின் பேரில் மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனை டீன் எம்.ஆர்.வைரமுத்துராஜூ தலைமையிலான மருத்துவக் குழு ஆய்வு செய்து சீலிட்ட உரையில் அறிக்கையைத் தாக்கல் செய்தனர்.
அந்த அறிக்கையில், நடிகர் தனுஷின் உடலில் உள்ள மச்சம் நவீன லேசர் சிகிச்சை மூலம் தடயமின்றி அகற்றப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது என்று மேலூர் தம்பதியர் தரப்பு வழக்குரைஞர் திங்கள்கிழமை தெரிவித்திருந்தார்.
இந்நிலையில், இதற்கு மறுப்புத் தெரிவிக்கும் வகையில் நடிகர் தனுஷ் தரப்பில் ஆஜராகும் மூத்த வழக்குரைஞர் ஜி.ஆர்.சுவாமிநாதன் செய்தியாளர்களிடம் செவ்வாய்க்கிழமை கூறியது:
நீதிபதிகள் கேட்ட மூன்ற கேள்விகளுக்கான பதில்கள் தான் மருத்துவ அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளன.அதில், நீதிபதி எழுப்பி முதல் கேள்விக்கான பதிலாக நடிகர் தனுஷின் உடலில் மேலூர் தம்பதியர் குறிப்பிட்டுள்ள மச்சம் மற்றும் தழும்பு போன்ற அடையாளங்கள் இல்லை என்று தெளிவாக மருத்துவர்கள் குறிப்பிட்டுள்ளனர். முதல் கேள்விக்கான பதில் தான் வழக்குடன் நேரடி தொடர்புடையது. மற்ற இரு பதில்களும் நீதிபதி எழுப்பிய கேள்விக்கான பொதுவான கருத்துக்கள்.
நீதிபதி கேட்ட கேள்வியையும் அதற்கு மருத்துவர்கள் அளித்த பதிலையும் இணைத்துப் படித்தால் மட்டுமே இதனை தெளிவாகப் புரிந்துகொள்ள முடியும். மாறாக பதிலை மட்டும் தனியாகப் படித்தால் குழப்பமே நிலவும். இதைப் பயன்படுத்தி, மேலூர் தம்பதியர் தரப்பு வழக்குரைஞர் தவறான கருத்தை சமூகவலைதளங்கள் மூலமாக பரப்பி வருகிறார்.
நீதிபதி முன்னிலையில் தனி அறையில் நடைபெற்ற விசாரணையின் தகவல்களை பொதுவெளியில் வெளியிடுவது முறையல்ல. கடந்த வாரம் மேலூர் தம்பதியர் தரப்பினர் என்னை அணுகினர். அப்போது வழக்கை நீதிமன்றத்தில் முறைப்படி சந்திக்க விரும்புகிறேன் என்று கூறி அவர்களைச் சந்திப்பதை தவிர்த்துவிட்டேன். பணம் பறிக்கும் நோக்கில் மேலூர் தம்பதியர் இந்த வழக்கைத் தொடர்ந்துள்ளனர். மருத்துவ அறிக்கையின்படி பார்க்கையில் வழக்கின் போக்கு நடிகர் தனுஷுக்கு சாதகமாகவே உள்ளது என்றார்.