September 24, 2022 தண்டோரா குழு
மருத்துவ கவுன்சிலிங்கிற்கு பின்னரே வேளாண் கவுன்சிலிங் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது என தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழக துணைவேந்தர் கீதாலட்சுமி தெரிவித்தார்.
கோவை தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழக துணைவேந்தர் கீதாலட்சுமி நிருபர்களிடம் கூறியதாவது
தரவரிசைப் பட்டியல் வெளியிடுவதற்கான அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளன. அரசு பள்ளியில் பயின்ற மாணவர்களுக்கான 7.5 சதவீதம் இடஒதுக்கீட்டு வரையறைகளை அரசு வழங்க வேண்டும். அதை வழங்கிய பின்னரே தரவரிசைப்பட்டியல் வெளியிட முடியும். இதுதவிர மருத்துவ கவுன்சிலிங்கிற்கு முன்னர் தரவரிசை வெளியிடப்பட்டு கவுன்சிலிங் நடத்துவதால், ஒரு சில மாணவர்கள் மருத்துவ இடம் கிடைத்ததும் அங்கு சென்று விடுவர். அந்த இடங்களை நிரப்ப மீண்டும் கவுன்சிலிங் நடத்த வேண்டியிருக்கும்.
இதைக்கருத்தில் கொண்டு மருத்துவ கவுன்சிலிங் முடிந்த பின்னர் வேளாண் கவுன்சிலிங்கை நடத்த திட்டமிட்டுள்ளோம். கவுன்சிலிங் துவங்கிய மூன்று வாரத்துக்குள் மாணவர்கள் சேர்க்கை முடிக்கும் அளவுக்கு அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
இவ்வாறு அவர் கூறினார்.