April 15, 2016 தண்டோரா குழு
டைட்டானிக் என்றதும் நம் எல்லோருக்கும் நினைவிற்கு வருவது ஜேம்ஸ் கேமரூன் இயக்கிய அழகிய காதல் திரைப்படம் “டைட்டானிக்“ தான். உலக வரலாற்றில் டைட்டானிக் கப்பல் மூழ்கிய சம்பவம் மக்களை பெரும் சோகத்தில் ஆழ்த்தியது என்றே சொல்லலாம்.
வட அயர்லாந்து பெல்பாஸ்ட் நகரில் உள்ள ஹார்லாண்ட் மற்றும் ஊல்ப் நிறுவனத்தால் 9 தளங்களைக் கொண்ட உலகின் பெரிய நீராவிக் கப்பலான ஆர்.எம்.எஸ் டைட்டானிக் கப்பல் உருவாக்கப்பட்டது. 19௦9 மார்ச் 31ம் தேதி இக்கப்பலின் கட்டுமானப் பணிகள் துவங்கப்பட்டது. இக்கப்பல் சுமார் 882.6 அடி (269 மீ) நீளமும், 175 அடி (53.3மீ) உயரமும், 52,310 டன் எடையுடன் கூடியதாகும்.
1912ம் ஆண்டு இக்கப்பல் சேவைக்கு விடப்பட்ட போது இதுவே உலகின் மிகப் பெரிய நீராவி ஆடம்பர கப்பலாக கருதப்பட்டது. டைட்டானிக் மூன்று வகுப்புகளைக் கொண்டதாகும் பொதுவாக மூன்றாவது கீழ் வகுப்பில் அமெரிக்காவில் குடியேறுவதற்காக சென்றவர்களே அதிகமாகப் பயணம் செய்தனர். முதல் வகுப்பில் பல புகழ்பெற்ற கோடீசுவரர்கள் தான் இருந்தனர். இவர்களுடன் கப்பலின் முதலாளி இஸ்மோவும் பயணம் செய்தார்.
1912ம் ஆண்டு ஏப்ரல் 1௦ம் தேதி தனது முதற்கட்ட பயணமாக இங்கிலாந்து செளதாம்ப்டன் துறைமுகத்தில் இருந்து அமெரிக்க நியூயார்க் நகரை நோக்கி கேப்டன் எட்வர்ட்ஸ்மித் தலைமையில் புறப்பட்டது.
ஆரம்பமே டைட்டானிக் கப்பலுக்கு தடங்கல் வந்தது. டைட்டானிக் கப்பலின் தாக்கத்தால் அங்கிருந்த நியுயார்க் என்னும் கப்பல் டைட்டானிக் கப்பலின் அருகில் வந்தது இதனால் சுமார் ஒரு மணி தாமதமாகவே டைட்டானிக் கப்பல் 2223 பயணிகளுடன் தனது சொர்க்க பயணத்தை துவங்கியது.
ஏப்ரல் 14ம் தேதி வெப்பநிலை குறைந்து கிட்டத்தட்ட உறைநிலையை அடைந்ததை அடுத்து கடல் அமைதியாகவே இருந்தது. இதற்கிடையில் அமெரிக்கா என்னும் கப்பல், டைட்டானிக் செல்லும் வழியில் பனிப்பாறைகள் இருப்பதாகச் செய்தி அனுப்பியது. ஆனால் அந்தச் செய்தி கிடைக்காமல் போனது.
தொடர்ந்து தனது பயணத்தை மேற்கொண்டது டைட்டானிக், ஏப்ரல் 14ம் தேதி நள்ளிரவு 11.40 மணிக்கு வட அட்லாண்டிக் பெருங்கடலில் ஒரு பனிப்பாறை இருப்பதைக் கண்ட பணியாட்கள் அதன் மீது மோதாமலிருக்க முயற்சி செய்தனர். இருந்தும் அவர்களது முயற்சி வீணாய்ப்போனது. இதனால் அந்த இடத்தில் கப்பல் நின்றது.
பனிப்பாறைகள் மீது உரசியதால் கப்பலிற்குள் தண்ணீர் புக ஆரம்பித்தது. 2 வருடங்கள் உழைப்பில் உருவாக்கப்பட்ட யாரும் அசைக்க முடியாது என நினைத்த கப்பல் கொஞ்சம் கொஞ்சமாக மூழ்கத் துவங்கியது.
பயணிகள் அங்கும் இங்குமாக உயிர்பிழைக்கப் போராடினார்கள். மொத்தமாக 20 உயிர்காப்பு படகுகள் தான் கப்பலில் இருந்துள்ளது. இதில், முதல் மற்றும் இரண்டாம் வகுப்புகளைச் சேர்ந்தவர்கள் அந்த உயிர் காப்பு படகில் ஏறுவதற்குச் சுலபமாக இருந்தது.
ஆனால் மூன்றாம் வகுப்பைச் சேர்ந்தவர்களுக்கு படகில் ஏறுவது பெரும் சிரமமாக அமைந்தது. அவர்கள் போராடி படகிற்கு வருவதற்குள் படகு முழுவதும் மூழ்கியது. இதில் 1357 ஆண்கள், 106 பெண்கள் மற்றும் 53 குழந்தைகளும் இறந்துபோனார்கள்.
கப்பலின் முதலாளி இஸ்மோ தப்பித்தால் போதும் எனத் தப்பித்து விட்டார். ஆனால் கேப்டன் எட்வர்ட் ஸ்மித் மட்டும் ஹீரோ போல் செயல்பட்டு தன்னால் முடிந்த அளவு கடைசி வரை பல உயிர்களைக் காப்பாற்றி தன் உயிரையும் தியாகம் செய்தார்.
இந்நிகழ்வு அமைதிக் காலத்தில் நடந்த மிகப்பெரும் கடல் அழிவாகவே கருதப்பட்டது. எத்தனை தலைமுறைகள் வந்தாலும் டைட்டானிக் கப்பலை மறக்க மாட்டார்கள் என்பதே நிதர்சனமான உண்மை.