April 4, 2022 தண்டோரா குழு
உலகளவில் கவனம் ஈர்த்து வரும் சத்குருவின் மண் காப்போம் இயக்கத்திற்கு 54 நாடுகளை உறுப்பினர்களாக கொண்டுள்ள காமன்வெல்த் அமைப்பு ஆதரவு தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக காமன்வெல்த் நாடுகள் அமைப்பின் பொது செயலாளர் அலுவலகம் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
“மண் வளத்தை மீட்டெடுத்து, சுற்றுச்சூழலை பாதுகாக்கும் மண் காப்போம் இயக்கத்தின் நோக்கமானது, காமன்வெல்த் அமைப்பின் பரிந்துரைகளுடன் முழுமையாக ஒத்துப்போகிறது. பருவநிலை மாற்றம், மண் வள அழிவு, பல்லுயிர் பெருக்க பாதிப்பு ஆகியவற்றின் மூலம் நம்முடைய நிலமும், மண்ணும் பெரும் பாதிப்புக்கு உள்ளாகி வருகிறது.
எனவே, நம் இயற்கை வளங்களை பாதுகாப்பதிலும், அதை நிர்வகிப்பதிலும் பலதரப்பட்ட மக்களின் ஒத்துழைப்பு, தொடர் அர்ப்பணிப்பு மற்றும் கூட்டு நடவடிக்கை தேவை” என குறிப்பிட்டுள்ளார்.
மண் வளத்தை பாதுகாக்க உலக நாடுகள் தேவையான சட்டங்களை இயற்ற வேண்டும் என்பதை வலியுறுத்தி மண் காப்போம் இயக்கத்தை சத்குரு தொடங்கி உள்ளார். இவ்வியக்கத்திற்கு ஐ.நாவின் பாலைவனமாதலை தடுக்கும் அமைப்பு (UNCCD), ஐ.நா. சுற்றுச்சூழல் அமைப்பு (UNEP), உலக உணவு அமைப்பு (WFP) மற்றும் இயற்கை பாதுகாப்பிற்கான சர்வதேச கூட்டமைப்பு (IUCN) உள்ளிட்ட சர்வதேச அமைப்புகள் ஏற்கனவே ஆதரவு தெரிவித்துள்ளன.
அதுதவிர, அரசியல், வணிகம், சமூகம், சுற்றுச்சூழல் மற்றும் கலாச்சாரம் சார்ந்த தலைவர்களிடம் இருந்து ஆதரவு பெருகி வருகிறது. மேலும், விளையாட்டு வீரர்கள் மற்றும் கலைஞர்களிடம் இருந்தும் ஆதரவு கிடைத்து வருகிறது.
கிரிக்கெட் ஜாம்பவான் விவியன் ரிச்சர்ட், கிறிஸ் கெயில், ப்ராவோ சகோதரர்கள், பாலிவுட் பிரபலங்களான கங்கனா ரனாவத், அஜய் தேவ்கான், ஜூஹி சாவ்லா, நடிகர் சந்தானம், பாடலாசிரியர் பா.விஜய் உள்ளிட்ட பலர் மண் காப்போம் இயக்கத்திற்கு ஆதரவு தெரிவித்து இருப்பது குறிப்பிட்டத்தக்கது.
மண் வளப் பாதுகாப்பு குறித்து உலக மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காக 100 நாள் மோட்டார் சைக்கிள் பயணத்தை சத்குரு மேற்கொண்டுள்ளார். மார்ச் 21-ம் தேதி லண்டனில் இருந்து புறப்பட்டு ஐரோப்பா கண்டத்தில் உள்ள பல்வேறு நாடுகளுக்கு சென்ற அவர் அடுத்து மத்திய கிழக்கு நாடுகளுக்கு பயணிக்க உள்ளார். 27 நாடுகளுக்கு 30,000 கி.மீ பயணிக்கும் அவர் தமிழ்நாட்டில் தனது பயணத்தை நிறைவு செய்ய உள்ளார்.