September 25, 2017 தண்டோரா குழு
கோவை மாநகரில் பல இடங்களில் வாகனங்களை நிறுத்துவதற்குப் போதுமான இட வசதியில்லாத காரணத்தினால் பொதுமக்கள் அவதிப்படுகின்றனர். “மல்டிலெவல் பார்க்கிங்” வசதி திட்டத்தை விரைந்து செயல்படுத்தக் கோரி பொதுமக்கள் வலியுறுத்துகின்றனர்.
கோவை மாநகரில் வாகனங்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டிருக்கிறது. இருசக்கர வாகனங்கள் , நான்கு சக்கர வாகனங்கள் என சுமார் 15 லட்சம் வாகனங்கள் கோவை மாநகரின் பிரதான சாலைகளான காந்திபுரம், டவுன் ஹால், உக்கடம், ரயில் நிலையம் போன்ற பகுதிகளில் இயங்குகின்றன. மேலும், ஆண்டுதோறும் புதிதாக ஒன்றரை லட்சம் வாகனங்கள் கோவை மாநகரில் பதிவு செய்யப்படுகின்றன.
வாகனங்களின் எண்ணிக்கை காரணமாக போக்குவரத்து நெரிசல் கடுமையாக உள்ளது. கோவை மாநகர பேருந்து நிலையங்கள் , ரயில் நிலையம், வணிக வளாகம், மாவட்ட ஆட்சியர் அலுவலகம், வட்டாட்சியர் அலுவலகம், உணவு விடுதிகள் , மருத்துவமனைகள் என வரும் வாடிக்கையாளர்கள் மற்றும் பொதுமக்கள் தங்களது வாகனங்களைச் சாலையோரங்களில் நிறுத்தி சென்று விடுகின்றனர். வாகன நிறுத்தம் வசதி போதிய அளவு இல்லை என்பதே அதற்கு முக்கிய காரணமாக அவர்கள் கூறுகின்றனர்.
கோவை அவிநாசி சாலை, சத்தி சாலை, மேட்டுப்பாளையம் சாலை, பாலக்காடு சாலை, நஞ்சப்பா சாலை, பொள்ளாச்சி சாலை, திருச்சி சாலை உள்ளிட்ட சாலைகளின் ஓரம் வாகனங்கள் அதிக அளவு நிறுத்தப்படுவதால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு அலுவலகம் செல்ல கால தாமதம் ஏற்பட்டு குறிப்பிட்ட நேரத்திற்கு அலுவலகம் செல்ல முடியாமல் அப்பகுதி மக்கள் தவித்து வருகின்றனர்.
இது குறித்து ஜே.பி. கார்த்திக் கூறுகையில், “வணிக வளாகங்கள், கடைகள், வீடுகள் போன்றவை அதிக அளவு கோவை மாநகரில் உள்ளது. ஆனால் அதற்கேற்ப வாகன நிறுத்தம் செய்யும் வசதி அந்த கட்டடங்களில் போதுமானதாக இல்லை.இதன் காரணமாகவே சாலை ஓரங்களில் வாகனங்களை மக்கள் நிறுத்தி செல்லும் சூழ்நிலை உருவாகிறது. கட்டடங்களின் கட்டுமானப் பணியின்போதே வாகன நிறுத்தம் வசதி ஏற்படுத்த அதிகாரிகள் வலியுறுத்த வேண்டும்” என்றார்.
கோவை மாநகரில் பல இடங்களில் வாகனங்களை நிறுத்த குறிப்பிட்ட இடங்களை காவல்துறையினர் ஒதுக்கியுள்ளனர். ஆனால், அவை போதுமானதாக இல்லை. அரசு மற்றும் தனியார் நிறுவனங்கள் வாகன நிறுத்துமிடங்களை ஏற்படுத்தியிருந்தாலும் வாகனங்களை நிறுத்த போதுமான இடவசதி இல்லை. இதற்குத் தீர்வாக பல் அடுக்கு (மல்டிலெவல்) பார்க்கிங் வசதி ஏற்படுத்த வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுகின்றனர்.
இது குறித்து கோவை மாநகர போக்குவரத்து காவல் துணை ஆணையர் எஸ். சரவணன் கூறுகையில், “காவல்துறையினர் வாகனங்களை நிறுத்த இடவசதி ஏற்படுத்தி கொடுகிறார்கள். ஆனால் வாகன ஓட்டிகள் சிலர் அதனை பின்பற்றுவது இல்லை. இதன் காரணமாகவே பிரதான சாலைகளில் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகின்றன. நோ பார்கிங் பதாதை வைத்துள்ள இடங்களில் கண்டிப்பாக வாகனங்களை நிறுத்தக் கூடாது. ஆனால், அதனை வாகன ஓட்டிகள் மீறுகிறார்கள். வாகன ஓட்டிகள் பொதுநலனுடன் சிந்தித்துச் செயல்பட்டாலே போக்குவரத்து பிரச்சினை பெருமளவு குறைந்து விடும். ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் கோவை மாநகரகம் இடம்பெற்றுள்ளது எனவே மல்டிலெவல் பார்க்கிங் வசதி நகரின் முக்கிய இடங்களில் ஏற்படுத்தப்படும். விரைவில் வாகன நிறுத்தம் பிரச்சனை முடிவுக்கு வந்துவிடும்” என்றார்.
கோவை மாநகரின் வளர்ச்சிக்காக ரூ.2௦௦௦ கோடி மதிப்பிலான திட்டங்கள் செயல்படுத்தப்படும் என்று தமிழக அரசு 2014ம் ஆண்டில் அறிவித்திருந்தது. இந்த திட்டத்தின் ஒரு பகுதியாக, தனியார் பங்களிப்புடன் கோவை மாநகர பகுதிகளில் மல்டிலெவல் பார்க்கிங் வசதி ஏற்படுத்தப்படும் எனவும் அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் இதுவரை இத்திட்டம் செயல்படுத்தவில்லை. இத்திட்டத்தை விரைவாகச் செயல்படுத்த வேண்டும் என கோவை மாநகர மக்கள் வலியுறுத்தியுள்ளனர்.