August 7, 2017 தண்டோரா குழு
மல்லையா போன்று கார்த்திக் சிதம்பரம் தப்பிவிடக் கூடாது என்பதற்காக தேடப்படும் நபராக அறிவிக்கப்பட்டுள்ளதாக சென்னை சென்னை உயர்நீதிமன்றத்தில் மத்திய அரசு விளக்கமளித்துள்ளது.
ஐ.என்.எக்ஸ் மீடியா நிறுவனத்துக்கு முறைகேடாக அந்நிய முதலீடு பெற்றது தொடர்பாக சி.பி.ஐ மற்றும் அமலாக்கத் துறை தொடர்ந்த வழக்குகளில் நேரில் ஆஜராக கார்த்திக் சிதம்பரத்திற்கு சம்மன் அனுப்பப்பட்டது. ஆனால், கார்த்தி சிதம்பரம் நேரில் ஆஜராகாமல் தவிர்த்து வந்தார். இதனால், கார்த்தி சிதம்பரத்தை தேடப்படும் நபராக மத்திய உள்துறை அமைச்சகம் அறிவித்து லுக்-அவுட் நோட்டீஸ் அனுப்பியது. இதனை எதிர்த்து கார்த்தி சிதம்பரம் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட மனு மீதான சென்னை உயர் நீதிமன்றத்தில் இன்றுவிசாரணைக்கு வந்தது.
அப்போது கார்த்திக் சிதம்பரம் தேடப்படும் நபர் என்பதை மத்திய அரசு உறுதி செய்தது. கார்த்திக் சிதம்பரம் தேடப்படும் நபர் என்பதற்கான கடிதத்தை மத்திய அரசு வழக்கறிஞர் நீதிமன்றத்தில் அளித்தார். மேலும்,மல்லையா போன்று வெளிநாடு தப்பிவிடக் கூடாது என்பதற்காக தேடப்படும் நபராக அறிவிக்கப்பட்டுள்ளதாக விசாரணையின் போது மத்திய அரசு வழக்கறிஞர் விளக்கம் அளித்துள்ளார்.
அப்போது குறுக்கிட்ட மனுதாரர் வழக்கறிஞர், கார்த்தி சிதம்பரத்தின் தொழிலை முடக்கும் நோக்கில் நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.இதனையடுத்து, வழக்கின் அடுத்த விசாரணையை வரும் 10ம் தேதிக்கு நீதிபதிகள் ஒத்திவைத்தனர்.