November 8, 2021 தண்டோரா குழு
கோவை மாநகராட்சி கமிஷனர் ராஜகோபால் சுன்கரா பல்வேறு பகுதிகளில் ஆய்வு மேற்கொண்டார். பின்னர் மழைநீர் சாலையில் தேங்காமல் வடிவதற்கு தேவையான பணிகளை செய்ய பொறியாளர்களுக்கு உத்தரவிட்டார்.
தொடர்ந்து கள்ளிமடை அருகே சங்கனூர் பிரதான கால்வாயில் ஆக்கிரமிப்புகளை உடனடியாக அகற்றி கால்வாயிலுள்ள செடி, கொடிகளை தூர்வாரி மழைநீர் தங்குதடையின்றி செல்வதற்கு தேவையான நடவடிக்கைகளை உடனடியாக மேற்கொள்ள பொறியாளர்களுக்கு உத்தரவிட்டார்.
கோவை மாநகராட்சி பகுதியில் தேங்கியுள்ள குப்பைகளை உடனுக்குடன் அப்புறப்படுத்தவும், கால்வாய்களில் தேங்கியுள்ள குப்பைகளை முழுவதுமாக அகற்றி தடையின்றி மழைநீர் செல்வதையும், குளங்கள், ஏரிகள் மற்றும் நீர் வரும் வெளியேற்றப்பாதைகளில் உள்ள அடைப்புகளை அகற்றிடவும்,
ஒவ்வொரு மண்டலத்திலும் ஜே.சி.பி.இயந்திரங்கள் ஓட்டுநருடன் தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும். மரம் அறுக்கும் இயந்திரங்களுடன் ஆபரேட்டர்கள் தயாராக இருக்க வேண்டும். இதனை உதவி கமிஷனர்கள் மற்றும் பொறியாளர்கள், சுகாதார ஆய்வாளர்கள் ஆகியோர் கண்காணிக்க வேண்டும் என மாநகராட்சி கமிஷனர் உத்தரவிட்டார்.
அதே போல் கோவை மாநகராட்சி பகுதிகளில் வடகிழக்கு பருவ மழைக் காலத்தில் ஏற்படும் நீர் தேங்குதல், கழிவு நீர் கால்வாய் அடைப்பு மற்றும் ஆபத்தான நிலையில் உள்ள மரங்கள் தொடர்புடைய புகார்கள் தொடர்பாக மாநகராட்சி தலைமை கட்டுப்பாட்டு அறை தொலைபேசி எண்-0422-2302323, மத்திய மண்டல கட்டுப்பாட்டு அறை தொலைபேசி எண்-0422-2215618, கிழக்கு மண்டல கட்டுப்பாட்டு அறை தொலைபேசி எண்-0422-2595950, மேற்கு மண்டல கட்டுப்பாட்டு அறை தொலைபேசி எண்-0422-2551800, வடக்கு மண்டல கட்டுப்பாட்டு அறை தொலைபேசி எண்-0422-2243133, தெற்கு மண்டல கட்டுப்பாட்டு அறை தொலைபேசி எண்-0422-2252705 ஆகியவற்றிக்கு புகார் அளிக்கலாம் என அவர் தெரிவித்துள்ளார்.
இந்த ஆய்வின்போது மண்டல உதவி கமிஷனர்கள் சுந்தர்ராஜன் (மத்தியம்), செந்தில்குமார் ரத்தினம்(கிழக்கு), அண்ணாதுரை (தெற்கு), உதவி செயற்பொறியாளர்கள் கருப்பசாமி, சுந்தர்ராஜன், பிரபாகரன் மற்றும் பலர் உடனிருந்தனர்.