November 8, 2021 தண்டோரா குழு
கோவை ஆட்சியர் அலுவலகத்தில் இன்று மக்கள் குறைதீர் கூட்டம் ஆட்சியர் சமீரன் தலைமையில் நடைபெற்றது.இதில், தமிழ்நாடு அரசு மருத்துவத்துறை ஊழியர் சங்கம் சார்பாக ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளிக்கப்பட்டது.
அதில் கூறியிருப்பதாவது:
மருத்துவத் துறையில் உள்ள ஊரக நலப்பணிகள் கட்டுப்பாட்டின் கீழ் இயங்கிவரும் ஆரம்ப சுகாதார நிலையங்களில் பல்நோக்கு மருத்துவமனை பணியாளர்கள் நியமிக்கப்பட்டு துணை இயக்குனர் அலுவலகம் மற்றும் ஆரம்ப சுகாதார நிலையங்களில் தினக்கூலி பணியாளர்கள் பணியாற்றி வருகின்றனர்.
கொரோனா காலங்களிலும் இவர்கள் பணியாற்றி உள்ளனர். இதனிடையே, கோவை மாவட்டத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட பல்நோக்கு மருத்துவமனை பணியாளர்கள் உள்ளனர். இந்நிலையில், கோவை மாவட்டத்தில் தமிழக அரசு தினக்கூலி 2021 -2022 ஆண்டுக்கான ஊதிய உயர்வு நிர்ணயம் செய்தல் பட்டியலில் இவர்கள் பிரிவு சேர்க்கப்படவில்லை. எனவே, பட்டியலில் உடனே இந்த பிரிவை சேர்க்கவும், பிற மாவட்டங்களில் வழங்குவது போல ஊதிய உயர்வை வழங்கவும் கலெக்டர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.
இந்நிலையில், கோவையில் நேற்று
இரவு முதல் அதிகாலை வரை விடிய விடிய கனமழை பெய்ததால் இன்று கலெக்டர் அலுவலகத்தில் மனுக்கள் கொடுக்க மக்கள் மிகவும் குறைந்த அளவே வந்தனர். இதனால், மக்கள் குறைதீர்ப்பு முகாம் வெறிச்சோடியது.