January 30, 2017 தண்டோரா குழு
மும்பை நகரில் உள்ள செம்பூர் பகுதியில் மூன்று மாத நாய்க்குட்டி மாடியில் இருந்து தூக்கி வீசப்பட்டதில் உயிரிழந்தது. இது குறித்து காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
மும்பை, செம்பூர் பகுதியில் மூன்று மாத நாய்க்குட்டி மாடியிலிருந்து தூக்கி வீசப்பட்டதில், கீழே விழுந்து பலத்த காயத்துடன் உயிரிழந்தது. இது ஒரே வாரத்தில் நடந்த இரண்டாவது குரூர சம்பவம் ஆகும்.
இச்சம்பவம் குறித்து புகார் கொடுத்த ஒருபெண், “சம்பவத்தின்போது, மாலை 5.3௦ மணியளவில் நாய்க்குட்டியின் அலறல் சத்தம் கேட்டது. சத்தம் அதிகரிக்கத் தொடங்கியதும் குடியிருப்பில் வசிக்கும் மற்றொருவர் வெளியே வந்து எங்கிருந்து சத்தம் கேட்கிறது என்று சுற்றிப் பார்த்திருக்கிறார். அப்போது ஒரு நாய்க்குட்டியை மாடியிலிருந்து சிலர் தூக்கி வீசுவதைப் பார்த்து அதிர்ச்சியடைந்து சத்தமிட்டுள்ளார். உடனே, அந்த நபர் ஓடிவிட்டார். இதனால் இந்த கொடூர செயலை செய்தது யார் என்று சரியாக தெரியவில்லை” என்று கூறினார்.
“நாய்க்குட்டியின் அலறலைக் கேட்டு, என்னுடைய சகோதரி வீட்டை விட்டு வெளியே வந்து பார்த்தபோது, அந்த நாய்க்குட்டி உயிருக்குப் போரடிக் கொண்டிருந்தது. முதல் உதவி செய்ய முற்பட்டபோது, அது உயிரிழந்துவிட்டது. இது குறித்து விலங்கு நல அமைப்புக்குத் தகவல் தரப்பட்டது. அவர்களுடைய உதவியுடன் காவல் நிலையத்தில் புகார் தரப்பட்டது. போலீசார் அந்த நாய்க்குட்டியின் உடலைப் பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். பரிசோதனையின் முடிவில் அதனுடைய இறப்பு இயற்கையானது அல்ல என்று தெரிவித்தனர்” என்றார் அந்தப் பெண்மணி.
இச்சம்பவம் குறித்து விவரித்த போலீஸ் அதிகாரி ஒருவர், “சம்பவம் நடந்த இடத்தைச் சுற்றி கண்காணிப்பு கேமரா இல்லை. இருப்பினும், இந்த கொடூரச் செயலைச் செய்தவரைக் கண்டிப்பாகப் பிடித்துவிடுவோம்” என்றார்.