April 30, 2022
தண்டோரா குழு
கோவை சத்தி ரோடு மற்றும் செட்டிபாளையம் மெயின் ரோட்டில் மாநகராட்சிக்கு சார்பில் மாடு அறுவை மனைகள் செயல்பட்டு வருகின்றன.
இந்த மனையை ஒப்பந்தப்புள்ளி ஏலத்தில் எடுத்தவர்கள் அரசு நிர்ணயம் செய்த மாடு அறுவை கட்டணம் ரூ.10 வசூலிக்காமல், சத்தி ரோட்டில் உள்ள அறுவை மனையில் சிறிய காளைக்கு ரூ.150ம், பெரிய காளைக்கு ரூ.500ம் வசூல் செய்கின்றனர்.
செட்டிபாளையம் மெயின் ரோட்டில் உள்ள அறுவை மனையில் சிறிய காளைக்கு ரூ. 150ம், பெரிய காளைக்கு ரூ.300ம் வசூலிக்கிறார்கள் என மாட்டிறைச்சி வியாபாரிகள் அன்மையில் கலெக்டர் சமீரன் மற்றும் மாநகராட்சி கமிஷனர் ராஜகோபால் சுன்கராவை சந்தித்து மனு அளித்தனர்.
மேலும் இந்த அறுவை மனைகளை அரசே எடுத்து நடத்தி அரசு நிர்ணயித்துள்ள கட்டணத்தை வசூல் செய்ய நடவடிக்கை எடுக்குமாறும் அவர்கள் கோரிக்கை விடுத்தனர்.
இந்நிலையில் இந்த புகாரின் அடிப்படையில் மாடு அறுவைமனைகளில் மாநகராட்சி அதிகாரிகள் திடீர் ஆய்வு மேற்கொள்ள திட்டமிட்டுள்ளனர்.
இதுகுறித்து மாநகராட்சி அதிகாரி ஒருவர் கூறுகையில்,
‘‘ வியாபாரிகள் அளித்த புகாரின் பேரில் நடவடிக்கை எடுக்கப்படும். அரசு நிர்ணயம் செய்த கட்டணத்தை விட கூடுதலாக கட்டணம் வசூல் செய்தால் அவர்கள் மீது நடவடிக்கை மேற்கொள்ளப்படும். இதற்காக மாடு அறுவை மணைகளில் திடீர் ஆய்வு மேற்கொள்ள திட்டமிடப்பட்டுள்ளது,’’ என்றார்.