June 16, 2017 தண்டோரா குழு
மாடுகளை இறைச்சிக்காக விற்க தடை விதிக்கப்பட்டதை கண்டித்து கோவை செஞ்சிலுவை சங்கம் முன்புஆதித்தமிழர் பேரவையினர் மாட்டு தலைகளுடன் போரட்டம் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.
நாடுமுழுவதும் மாடுகளை இறைச்சிக்காக சந்தைகளில் விற்க மத்திய அரசு தடை விதித்துள்ளதற்கு நாடு முழுவதும் கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. மத்திய அரசின் நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து பல்வேறு அமைப்புகள் போரட்டம் நடத்தி வருகின்றன.
இந்நிலையில் கோவை செஞ்சிலுவை சங்கம் முன்பாக மாட்டிறைச்சி படையல் வைத்து போரட்டம் நடத்த போவதாக ஆதி தமிழர் பேரவை அமைப்பினர் அறிவித்து இருந்தனர். இதற்கு காவல் துறையினர் அனுமதி மறுத்து இருந்தனர். எனினும் தடையை மீறி ஆதி தமிழர் பேரவை சார்பில் போராட்டம் நடைபெற்றது.
இதையடுத்து போராட்டத்தில் ஈடுபட்ட அந்த அமைப்பின் மாவட்ட செயலாளர் முருகன் உள்ளிட்ட 20 பேரை காவல் துறையினர் கைது செய்தனர். இதற்கிடையில் அவர்கள் கைது செய்யப்பட்ட சில நிமிடங்களில் அந்த அமைப்பினை சேர்ந்த இருவர் மாட்டு தலைகளுடன் சாலையின் நடுவே ஓடிவந்து மத்திய அரசுக்கு எதிராக முழக்கம் எழுப்பினர்.அப்போது அவர்களை தடுத்து நிறுத்திய காவல்துறையினர் இரண்டு மாட்டு தலைகளை கைப்பற்றியதுடன் அந்த இருவரையும் கைது செய்து வாகனத்தி்ல் ஏற்றிச்சென்றனர்.
இறைச்சிக்காக வெட்டப்பட்ட மாட்டுதலைகளுடன் ஆதி தமிழர் பேரவை அமைப்பினர் நடத்திய போராட்டம் காரணமாக செஞ்சிலுவை சங்கம் அருகே பரபரப்பான சூழ்நிலை நிலவியது.
இந்நிலையில்,மாட்டு தலைகளுடன் சாலையின் நடுவே ஓடிவந்து மத்திய அரசுக்கு எதிராக முழக்கம் எழுப்பிய வானுகன் மற்றும் முரளி ஆகியோரை 341 மற்றும் 188 சட்டத்தின் கீழ் கைது செய்து போலீசார் சிறையில் அடைந்தனர்.