August 16, 2017 தண்டோரா குழு
ஹைதராபாத் மத்திய பல்கலைக்கழக ஆராய்ச்சிப் படிப்பு மாணவர் ரோகித் வெமுலா தலித் இல்லை விசாரணை கமிஷன் அறிக்கை அளித்துள்ளது.
ஹைதராபாத் மத்திய பல்கலைக்கழக ஆராய்ச்சி படிப்பு மாணவர் ரோஹித் வெமுலா கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு தற்கொலை செய்துக் கொண்டார். நாடு முழுவதும் கொந்தளிப்பை ஏற்படுத்திய மாணவர் ரோஹித் வெமுலா தற்கொலை குறித்து விசாரித்து அறிக்கை அளிக்க ஓய்வு பெற்ற நீதிபதி ஏ.கே.ரூபன்வால் தலைமையிலான குழுவை மத்திய மனிதவளத்துறை அமைச்சகம் நியமித்தது.
ரோஹித் வெமுலா தற்கொலை செய்துக் கொண்டதை அடுத்து 2016 ஜனவரி 17ம் தேதி ரூபன்வால் குழு அமைக்கப்பட்டது.தற்போது அசோக்குமார் ரூபன்வால் கமிஷன் அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.
அதில், ரோஹித் வெமுலா தற்கொலைக்கு சொந்த பிரச்சனைகளே காரணம் என்றும் பல்கலைகழக நிர்வாகத்தின் நெருக்கடிகள் காரணம் எனில் தனது கடிதத்தில் வெமுலா அதனை குறிப்பிட்டிருப்பார் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதைபோல் உலக நடப்புகளால் அவர் மன அழுத்தத்தில் இருந்ததாகவும் இட ஒதுக்கீட்டிற்காக வெமுலா குடும்பத்தினர் தங்களை தலித்தாக மாற்றி கொண்டதாகவும் அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
இதற்கிடையில், இந்த அறிக்கைக்கு காங்கிரஸ் கட்சி கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகத்தின் அறிவுறுத்தலின் பேரில் இந்த அறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளதாக அக்கட்சி குற்றம் சாட்டி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.