February 21, 2022 தண்டோரா குழு
கோவை மாநகராட்சிக்கான வாக்கு எண்ணும் மையத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் பாதுகாப்பு பணிகளை ஆணையர் ராஜகோபால் சுன்கரா நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
கோவை மாநகராட்சியில் உள்ள 100 வார்டுகளுக்கான நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் கடந்த 19-ம் தேதி நடைபெற்றது 22ம் தேதி வாக்குகள் எண்ணப்படுகின்றன. முன்னதாக வாக்குப்பதிவுக்கு பயன்படுத்தப்பட்ட அனைத்து வாக்குப்பதிவு இயந்திரங்களும் கோவை தடாகம் சாலையில் உள்ள அரசினர் தொழில்நுட்பக் கல்லூரி வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள வாக்கு எண்ணிக்கை மையத்தில் பாதுகாப்புடன் வைக்கப்பட்டுள்ளன.
வாக்கு எண்ணிக்கை மையத்தைப் பொறுத்தவரை 3 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. காவல் துறையினருடன் மாநகராட்சி அதிகாரிகள் அடங்கிய குழுவினரும் பாதுகாப்பு மற்றும் கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர்.இந்நிலையில் வாக்கு எண்ணிக்கை மையத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் பாதுகாப்பு பணிகளை மாநகராட்சி தேர்தல் நடத்தும் அலுவலரும் ஆணையருமான ராஜகோபால் சுன்கரா நேற்று நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
வாக்கு எண்ணிக்கை மையம் முழுவதும் கேமராக்கள் மூலமாக கண்காணிக்கப்பட்டு வரும் நிலையில், பாதுகாப்பு அறை உள்ள கட்டிடத்தின் வெளிப்புற பகுதிகள் அனைத்தும் சுற்றிப் பார்த்து ஆய்வு செய்த ஆணையர், கேமரா காட்சிகளை கண்காணிக்கும் பணியில் இருந்த காவல் துறையினர், மாநகராட்சி அலுவலர்களிடம், அவர்கள் மேற்கொண்டு வரும் பணி குறித்து கேட்டறிந்தார்.
வாக்கு எண்ணிக்கை மையத்துக்கு வேட்பாளர்களின் அங்கீகரிக்கப்பட்ட முகவர்கள் வந்து செல்லும் நிலையில், பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ள அனைவரும் முழு நேரமும் உஷார் நிலையில் இருக்க மாநகராட்சி அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.