January 7, 2022 தண்டோரா குழு
கோவை மாநகராட்சிக்கு சொந்தமான வணிக வளாகங்கள், கடைகள் போன்றவற்றில் பல மாதங்களாக வாடகை செலுத்தாத கடைகளை கணக்கெடுக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.
கோவை மாநகராட்சியில் கிழக்கு, மேற்கு, மத்திய, வடக்கு, தெற்கு மண்டலம் என ஐந்து மண்டலங்கள் உள்ளன. இந்த மண்டலங்களில் மாநகராட்சிக்கு சொந்தமான வணிக வளாகங்கள் உள்ளன. இதில் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட கடைகள் உள்ளன. இதில் மாநகராட்சி வணிக வளாகத்தில் செயல்பட்டு வரும் 200க்கும் மேற்பட்ட கடைகள் பல மாதங்களாக மாநகராட்சிக்கு வாடகை செலுத்தாமல் செயல்பட்டு வருகிறது என குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதனால் மாநகராட்சி நிர்வாகத்திற்கு வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளது.
இதுகுறித்து மாநகராட்சி அதிகாரி ஒருவர் கூறுகையில்,
” கோவை மாநகராட்சிக்கு சொந்தமான கடைகளில் பல மாதங்களாக வாடகை செலுத்தாமல் உள்ள கடைகளை கணக்கெடுக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. இக்கடைகளில் நோட்டீஸ் ஒட்டப்பட்டு சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும். மேலும் வாடகை செலுத்தாமல் இயங்கி வரும் கடைகளுக்கு, அவர்கள் மாநகராட்சியில் வைப்புத் தொகையாகச் செலுத்தியிருந்த தொகையில் இருந்து வாடகை கழிக்கப்படும்’’ என்றார்.