May 7, 2022 தண்டோரா குழு
கோவை மாநகராட்சி பகுதிகளில் 24 மணி நேரமும் குடிநீர் வழங்கப்படும் பைலட் திட்டம் கடந்த ஏப்ரல் மாதம் முதல் துவங்கப்பட்டுள்ளது. முதல் கட்டமாக மாநகராட்சி மேற்கு மண்டலத்திற்குட்பட்ட சேரன் நகரில் இத்திட்டம் மேயர் கல்பனா ஆனந்தகுமார் சார்பாக துவக்கி வைக்கப்பட்டது. தற்போது மாநகராட்சியின் அனைத்து மண்டலங்களிலும் 20க்கும் மேற்பட்ட வார்டுகளில் அடுத்த கட்டமாக விரைவில் பைலட் திட்டம் துவங்கப்பட உள்ளது.
இதுகுறித்து மாநகராட்சி அதிகாரி ஒருவர் கூறியதாவது:
கோவை மாநகராட்சியில் பைலட் திட்டம் அடுத்த கட்டமாக அனைத்து மண்டலங்களிலும் 20க்கும் மேற்பட்ட வார்டுகளில் விரைவில் துவங்கப்பட உள்ளது.இத்திட்டத்தின் மூலம் குடிநீர் பிரச்னைக்கு தீர்வு காணப்படும் என நம்பப்படுகிறது.மேல்நிலை தொட்டியில் உள்ள தண்ணீர், நல்ல தரத்துடன் பொதுமக்களுக்கு வழங்கப்படும். தற்போதுள்ள விநியோக வரிசையில் உள்ள அனைத்து வால்வுகளும் மின்காந்த வால்வுகளாக மாற்றப்பட்டு, புதிதாக உருவாக்கப்பட்ட மொபைல் அப்ளிகேஷன் மூலம் செயல்பாடு கண்காணிக்கப்பட்டு ரிமோட் மூலம் கட்டுப்படுத்தப்படும்.
நீர் விநியோகத்தில் அழுத்தம் மற்றும் ஓட்டம் தொடர்ந்து அளவிடப்பட்டு குறிப்பிடப்பட்ட குடிநீரின் அளவு கிடைத்தவுடன் வால்வுகள் தானாகவே மூடப்படும். கூடுதலாக, குளோரின், நீரின் அழுத்தம் போன்ற நீரின் தர அளவுகள், தலைமை நீரேற்ற நிலையத்தில் இருந்து இறுதி பயனாளி வரைஅளவிடப்படும். இந்த அளவுகளில் ஏதேனும் பிரச்னை ஏற்பட்டால் உடனடியாக நீர் வழங்கல் பொறியாளர்களுக்கு தெரிவிக்கப்படும்.
விரயத்தை குறைப்பதும், தேர்ந்தெடுக்கப்பட்ட இடத்தில்முழு பிராந்தியத்திற்கும் சமமாக விநியோகிக்க ஸ்மார்ட் விநியோக முறையை செயல்படுத்துவதும் இத்திட்டத்தின் முக்கிய நோக்கம் ஆகும். இவ்வாறு அவர் கூறினார்.