April 5, 2022 தண்டோரா குழு
கோவை மாநகராட்சியில் குப்பை அள்ளும் வாகனங்களை மேயர் இன்று காலை ஆய்வுசெய்தார்.
கோவை மாநகராட்சியில் உள்ள 100 வார்டுகளிலும் நாள்தோறும் சேகரமாகும் குப்பைகளை அகற்றுவதற்காக மாநகராட்சி சார்பில் 11 வாகனங்கள், தனியார் ஒப்பந்ததாரர்கள் சார்பில் 45 வாகனங்கள் என மொத்தம் 56 வாகனங்கள் இயக்கப்படுகின்றன.
இவை அனைத்தும் இன்று காலை வஉசி மைதானத்துக்கு கொண்டுவரப்பட்டன. இவற்றை, மேயர் கல்பனா ஆனந்தகுமார் நேரில் ஆய்வுசெய்தார்.
பின்னர்,”மாநகராட்சி பகுதிகளில் சேகரமாகும் குப்பைகளை வலையினால் மூடி சாலை மற்றும் தெருக்களில் சிதறாமல் வெள்ளலூர் குப்பை கிடங்கிற்கு கொண்டு செல்லவேண்டும். குப்பை எடுக்கும் வாகனங்களில் முழு கொள்ளளவு ஏற்ற வேண்டும். வாகனங்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ள வார்டுகளில் அனைத்து தெருக்களிலும் நாள்தோறும் குப்பைகளை எடுக்க வேண்டும்.
சேவை மனப்பான்மையுடன் பணியாற்றி, குப்பை இல்லா மாநகரமாக கோவையை உருவாக்க முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும்” என டிரைவர்கள் மற்றும் மண்டல சுகாதார ஆய்வாளர்களிடம் கேட்டுக்கொண்டார்.
ஆய்வின்போது,துணை மேயர் வெற்றிசெல்வன், மாநகராட்சி துணை கமிஷனர் ஷர்மிளா, நகர்நல அலுவலர் டாக்டர் சதீஷ்குமார், மண்டல உதவி கமிஷனர்கள் சரவணன்,சங்கர், மோகனசுந்தரி,மார்ச்செல்வி,அண்ணாதுரை மற்றும் மாநகராட்சி அலுவலர்கள் உடனிருந்தனர்.