May 10, 2022 தண்டோரா குழு
கோவை மாநகராட்சியில் உள்ள 100 வார்டுகளிலும் நாள்தோறும் சேகரமாகும் குப்பைகளை அகற்றுவதற்காக, மாநகராட்சி சார்பில் 11 வாகனங்கள், தனியார் ஒப்பந்ததாரர்கள் சார்பில் 45 வாகனங்கள் என மொத்தம் 56 வாகனங்கள் இயக்கப்படுகின்றன.
மாநகராட்சி பகுதிகளில் சேகரமாகும் குப்பைகளை வலையினால் மூடி சாலை மற்றும் தெருக்களில் சிதறாமல் வெள்ளலூர் குப்பைக்கிடங்கிற்கு கொண்டு செல்ல வேண்டும். குப்பை எடுக்கும் வாகனங்களில் முழு கொள்ளளவு ஏற்ற வேண்டும். வாகனங்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ள வார்டுகளில் அனைத்து தெருக்களிலும் நாள்தோறும் குப்பைகளை எடுக்க வேண்டும் என்பது இந்த வாகனங்களின் முக்கிய பணிகளாக உள்ளன.
இந்நிலையில் மாநகராட்சி எல்லை தாண்டி சென்று குப்பைகளை ஏற்றி வந்து அதனை வெள்ளலூர் குப்பைக்கிடங்கில் கொட்டி வந்த குப்பை வாகனம் ஒன்று கண்டுபிடிக்கப்பட்டது. இதனை தொடர்ந்து மாநகராட்சியின் அனைத்து வார்டுகளிலும் குப்பை எடுக்கும் வாகனங்கள் குறித்து கண்காணிக்க மாநகராட்சி நிர்வாகம் சார்பில் குழு ஒன்று அமைக்கப்பட்டது. தற்போது மாநகராட்சியில் இக்குழு தினமும் அறிக்கை சமர்பிக்கிறது.
இது குறித்து மாநகராட்சி அதிகாரி ஒருவர் கூறுகையில்,
‘‘மாநகராட்சி சார்பில் 56 குப்பை எடுக்கும் வாகனங்கள் உள்ளன. இந்த வாகனங்கள் செல்லும் தூரம், தினமும் பயன்பாட்டிற்கு ஏற்றவாறு ஏற்படும் செலவினங்கள் குறித்து தினமும் மாநகராட்சிக்கு அறிக்கை சமர்பிக்கப்படுகிறது’’ என்றார்.