November 10, 2022 தண்டோரா குழு
கோவை மாநகராட்சி சார்பாக கொரோனா மற்றும் வைரஸ் காய்ச்சல் தடுப்பு நடவடிக்கைகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. மக்கள் கூட்டமாக கூடும் இடங்களில் கொரோனா விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது.
இதுதவிர, சமூக வலைதளங்களில் மாநகராட்சி சார்பாக விழிப்புணர்வு மேற்கொள்ளப்படுகிறது. இதன் ஒருபகுதியாக, பிரபலமான திரைப்படக்காட்சிகள் மூலம் மீம்ஸ் வாயிலாக மாநகராட்சியின் பேஸ்புக் பக்கத்தில் கொரோனா மற்றும் வைரஸ் காய்ச்சல்கள் தொடர்பாக விழிப்புணர்வு ஏற்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது.
இதுகுறித்து மாநகராட்சி அதிகாரி ஒருவர் கூறுகையில்,
கோவையில் கொரோனா பரவல் மிகவும் குறைந்துள்ளது. எனினும், மாநகராட்சி சார்பாக கொரோனா பரவலை தடுக்க எடுக்கப்படும் நடவடிக்கைகளில் எந்த சமரசமும் இல்லை. கொரோனா மற்றும் வைரஸ் காய்ச்சல்கள் தொடர்பாக மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ள திரைப்பட காட்சிகள் மூலம், அவசியம் இன்றி வெளியே வீட்டை வீட்டு வெளியே செல்லக்கூடாது, முகக்கவசம் அணிய வேண்டும், சமூக இடைவெளியை கடைபிடிக்க வேண்டும், கிருமி நாசினி அல்லது சோப் கொண்டு கைகளை கழுவ வேண்டும் போன்றவற்றை வலியுறுத்தும் வகையில் மீம்ஸ் பேஸ்புக்கில் பகிரப்பட உள்ளது. மாநகராட்சியின் புதிய முயற்சிக்கு மக்கள் பெருமளவில் விழிப்புணர்வு அடைவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது என்றார்.