February 17, 2022
தண்டோரா குழு
கோவையில் கொரோனா வைரஸ் பரவல் குறைந்து வருவதை அடுத்து மாநகராட்சி பகுதிகளில் உள்ளவர்களுக்கு சளி, காய்ச்சல் கண்டறியும் பணியில் 500 பேர் மட்டுமே ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். முன்னதாக 2000 பேர் வரை ஈடுபடுத்தப்பட்டிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
கோவை மாநகர் பகுதியில் கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்த மாநகராட்சி நிர்வாகம் சார்பில் பல்வேறு தடுப்பு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. இதன் ஒரு பகுதியாக மாநகராட்சி பகுதிகளில் 100க்கும் மேற்பட்ட இடங்களில் தினமும் மருத்துவ முகாம்கள் நடத்தப்படுகின்றன.
இது தவிர கொரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்தும் வகையில் வீடு, வீடாக சென்று சளி, காய்ச்சல் உள்ளதா? போன்ற கொரோனா தொற்றை கண்டறியும் பணிகளை மாநகராட்சி அதிகாரிகளுடன் இணைந்து சுகாதாரத் துறையினர் மேற்கொண்டு வருகின்றனர். இதன் காரணமாக மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் கொரோனா பரவல் மிகவும் குறைந்துள்ளது.
இது குறித்து மாநகராட்சி அதிகாரி ஒருவர் கூறுகையில்,
‘‘கோவை மாநகராட்சி பகுதிகளில் வீடு, வீடாக சென்று கொரோனா அறிகுறி உள்ளதா? என ஆய்வும் செய்யும் பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. சுமார் 500க்கும் மேற்பட்ட களப்பணியாளர்கள் இப்பணிகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்,’’என்றார்.