December 21, 2021 தண்டோரா குழு
கோவை கணபதி கணேஷ் நகரில் உள்ள மாநகராட்சி பள்ளி கட்டிடத்தின் தரம் குறித்த பட்டியலை விரைவில் அறிக்கையாக வழங்க பொறியாளர்களுக்கு மாநகராட்சி கமிஷனர் ராஜ கோபால் சுன்கரா உத்தரவிட்டுள்ளார்.
கோவை மாநகராட்சி சின்னவேடம்பட்டி பகுதியில் நடைபெற்றுவரும் சிறப்பு தூய்மைப்பணியை மாநகராட்சி கமிஷனர் ராஜகோபால் சுன்கரா பார்வையிட்டார்.
அவர் கூறும்போது,
‘‘கோவை மாநகராட்சியில் உள்ள 5 மண்டலங்களிலும் மண்டலத்திற்கு 20 தூய்மைப்பணியார்கள், 20 கொசு ஒழிப்பு பணியாளர்கள் கொண்ட சிறப்பு குழு உருவாக்கப்பட்டு தினமும் ஒவ்வொரு மண்டலத்திலுள்ள 3 இடங்களைக் கண்டறிந்து சாக்கடையை சுத்தம் செய்தல், குப்பைகளை அகற்றுதல், மரக்கழிவுகளை அகற்றுதல் போன்று பணிகளை மேற்கொள்வார்கள்.
கொசு ஒழிப்பு பணியாளர்கள் கொசு உற்பத்தியாகும் இடங்களை கண்டறிந்து, கொசு புழுக்களை அழிக்கும் பணிகளை மேற்கொள்வதுடன் கொசு மருந்து தெளித்தல், புகை மருந்து தெளித்தால் போன்ற பணிகளை மேற்கொள்வார்கள்’’ என தெரிவித்தார். தொடர்ந்து, அத்திப்பாளையம் சாலை, சின்னவேடம்பட்டி பகுதியில் ரூ.20 லட்சம் மதிப்பீட்டில் அமைக்கப்பட்ட தார் சாலையின் தரம் குறித்து, மாநகராட்சி கமிஷனர் ஆய்வு மேற்கொண்டார்.
உடையாம்பாளையம் பகுதியில் பயன்படுத்தாமல் இருந்த உள்விளையாட்டரங்கத்தை உடனடியாக பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வருமாறு சம்மந்தப்பட்ட அலுவலர்களுக்கு மாநகராட்சி கமிஷனர் அறிவுறுத்தினார். பின்னர், கணபதி, கணேஷ் நகரில் உள்ள மாநகராட்சி பள்ளியின் கட்டிடத்தன்மை மற்றும் தரம் குறித்து, ஆய்வு மேற்கொண்ட மாநகராட்சி கமிஷனர் கட்டிடத்தின் உறுதித்தன்மை குறித்த பட்டியலை விரைவில் அறிக்கையாக வழங்க பொறியாளர்களுக்கு உத்தரவிட்டார்.