March 17, 2017 தண்டோரா குழு
கோவையில் மான் கறி பதுக்கிய நபருக்கு ஜாமீன் வழங்க வன விலங்குகளுக்கு ஒரு மாதம் தண்ணீர் ஊற்ற வேண்டும் என நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.
கோவை மாவட்டம் அன்னூர் பகுதியைச் சேர்ந்தவர் செல்வராஜ். இவர் கடந்த மாதம் வீட்டில் மான் கறி வைத்திருந்ததாக சிறுமுகை வனத்துறையினரால் கைது செய்யப்பட்டு கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார். செல்வராஜின் வழக்கறிஞர் சிவகுமார் மேட்டுப்பாளையம் குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் புதன்கிழமை ஒரு மனு தாக்கல் செய்தார். இம்மனு மீதான விசாரணையை நீதிபதி சுரேஷ்குமார் நடத்தினார்.
அப்போது, செல்வராஜ் மீது வன உயிரின பாதுகாப்புச் சட்டப் பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்துள்ளதால் அவருக்கு ஜாமீன் வழங்க அரசு தரப்பு எதிர்ப்பு தெரிவித்தது. இருப்பினும் அவரது குடும்ப சூழ்நிலையைக் கருத்தில் கொண்டு நிபந்தனை ஜாமீன் வழங்கி நீதிபதி உத்தரவிட்டார்.
“எனினும், குற்றம் சாட்டப்பட்ட செல்வராஜ் தற்போது நிலவும் வறட்சியின் காரணமாக வனப் பகுதியில் கடும் குடிநீர்த் தட்டுப்பாடு நிலவுவதால் வன விலங்குகளின் தாகம் போக்கும் வகையில், ஒரு மாதத்திற்கு மேட்டுப்பாளையம் வன பகுதியில் அமைக்கப்பட்ட நீர் தொட்டிகளில் தண்ணீர் ஊற்ற வேண்டும். ஒரு மாதம் கழித்து இது தொடர்பாக சம்பந்தப்பட்ட வன அதிகாரியிடம் சான்றிதழ் பெற வேண்டும்” என்று நீதிபதி உத்தரவிட்டார்.