February 21, 2017 தண்டோரா குழு
மேட்டுப்பாளையம் அருகே சிறுமுகை வனப்பகுதியில் மான்களை வேட்டையாடி இறைச்சியைப் பல்வேறு பகுதிகளில் விற்பனை செய்து வந்தவரை வனத் துறையினர் கைது செய்தனர். இதில் தலைமறைவான முக்கிய நபர் தேடப்பட்டு வருகிறார்.
கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் அருகே உள்ள சிறுமுகை வனப்பகுதியில் புள்ளிமான், சருகுமான், திருகுமான் உள்ளிட்ட மான் வகைகள் அதிக அளவில் காணப்படுகின்றன.
இங்குள்ள காட்டுமான்களைப் பல்வேறு குழுக்களாகப் பிரிந்து வேட்டையாடி மேட்டுப்பாளையம், அன்னூர், சிறுமுகை, காரமடை உள்ளிட்ட பகுதிகளில் சிலர் விற்பனை செய்து வருவதாக வனத் துறைக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது.
அதையடுத்து சிறுமுகை வனத்துறையினர் பல்வேறு பிரிவுகளாகப் பிரிந்து அன்னூர் பகுதியில் விசாரணையைத் தீவிரப்படுத்தினர். அப்போது அன்னூர் பகுதியில் இருசக்கர வாகனத்தில் மூட்டையுடன் சந்தேகத்துக்கிடமான வகையில் வந்துகொண்டிருந்த செல்வம் என்பவரை மடக்கிப் பிடித்தனர். வனத்துறையினர் விசாரணை செய்ததில் அதில் மான் இறைச்சி இருந்தது கண்டுபிடிக்கபட்டது.
தொடர்ந்து நடத்திய விசாரணையில், பெத்திகுட்டை கிரமம் அருகே வெள்ளமொக்கை பகுதியில் வசித்து வரும் மாரியப்பன் என்பவர்தான் தொடர்ந்து மான்களை வேட்டையாடி அதன் இறைச்சியைப் பல்வேறு நபர்கள் மூலம் விற்பனை செய்து வந்தது தெரியவந்தது.
அதையடுத்து அந்த இடத்தில் சிறுமுகை வனச்சரகர் மனோகரன் தலைமையில் ஆய்வு நடத்தியதில் ஏற்கனவே வேட்டையாடிய மான்களின் தோல், மான் கால்கள் மற்றும் வேட்டைக்குப் பயன்படுத்திய சுருக்குக் கம்பிகள் ஆகியவற்றை வனத்துறையினர் பறிமுதல் செய்தனர்.
மாரியப்பன் வீட்டில் தொடர்ந்து வனத்துறையினர் ஆய்வு மேற்கொண்ட போது 50 லிட்டர் கள்ளச் சாராய பீப்பாய்களைக் கண்டுபிடித்தனர். அதனைப் பறிமுதல் செய்த வனத்துறையினர் தலைமறைவாக உள்ள மாரியப்பனைத் தீவிரமாக தேடி வருகின்றனர்.