October 7, 2024 தண்டோரா குழு
ஆண்டுதோறும் அக்டோபர் 29ம் தேதி சர்வதேச மூளை பக்க வாத தினமாகவும், அக்டோபர் மாதம் மூளை பக்கவாத மாதமாகவும் அனுசரிக்கப்படுகிறது. இதனையடுத்து,மூளை பக்கவாதம் குறித்த விழிப்புணர்வு கருத்தரங்கு கோவை அவிநாசி சாலையில் உள்ள தனியார் ஓட்டலில் நடைபெற்றது.
மூளை பக்கவாதம் குறித்த சர்வதேச அமைப்பான கேசிபி அமைப்பின் சார்பில் அமைப்பின் கோவை மாவட்டத் தலைவர் டாக்டர் கே.அசோகன் தலைமையில்
நடத்தப்பட்ட இந்த கருத்தரங்கில் மூளை பக்கவாத சிறப்பு மருத்துவர்கள் பி.பிரகாஷ், ஆர்.பாலசுப்பிரமணியன்,அருணா தேவி, வேதநாயகம் நாகரத்தினம்,ஆர்.ரம்யா, அருண் ராமராஜ் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.
இதுகுறித்து கேசிபி அமைப்பின் கோவை மாவட்டத் தலைவர் டாக்டர் கே.அசோகன் கூறுகையில்,
மூளை பக்கவாதத்தைப் பொறுத்தவரை பி பாஸ்ட் எனப்படும் தடுமாற்றம், பார்வை குறைபாடு, முகம், வாய் கோணுதல், கை, கால் ஓய்ந்து விடுதல், பேச்சு தடுமாற்றம் இவையே அறிகுறிகளாகும்.இதில் ஏதாவது பிரச்சனை ஏற்பட்டால் நாலரை மணி நேரத்துக்குள் மருத்துவர் களை அணுக வேண்டும்.மருத்துவர்கள் பரிசோதித்து அது மூளை பக்கவாதமாக இருந்தால் மூளை நரம்பில் மருந்தை செலுத்தி அதில் உள்ள அடைப்பை நீக்கி குணப்படுத்தி விடலாம்.
தங்க மணித்துளி எனப்படும் உரிய நேரத்தில் இந்த சிகிச்சை அளித்தால் மூளை பக்கவாதத்தில் இருந்து விடுபடலாம். மாரடைப்பு தொடர்பாக பொதுமக்களிடையே உள்ள விழிப்புணர்வு மூளை பக்கவாதத்துக்கு இல்லை.இதற்கு தகுந்த சிகிச்சை எடுக்கவில்லை என்றால் வாழ்நாள் முழுவதும் முடங்க வேண்டிய நிலை ஏற்படும்.
மூளை பக்கவாதத்துக்கு உயர் ரத்த அழுத்தம்,சர்க்கரை நோய், கொலஸ்ட்ரால், அதிக உடல் எடை புகைப்பிடித்தல், மன அழுத்தம், தூக்கமின்மை,உடற்பயிற்சி இல்லாதது ஆகியவையே காரணமாகும்.40 வயதைக் கடந்தவர்களுக்கு குறித்த இடைவெளியில் மருத்துவ பரி சோதனை என்பது மிக முக்கியமாகும். பெரியவர்களுக்கு மட்டுமல்லாமல், குழந்தைகளுக்கும் தலையில் அடிபடுதல் போன்ற காரணங்களாலும், மரபுவழியாலும் மூளை பக்கவாதம் ஏற்படலாம் என்றார்.
மேலும் மிக முக்கியமாக பக்கவாதத்தின் ஆரம்ப எச்சரிக்கை அறிகுறிகளான, முகம் ஒரு பக்கம் இழுத்து கொள்வது,
ஒரு கை அல்லது கால்கள் பலவீனமாவது, பேச்சு குளறுவது போன்ற அறிகுறிகள் ஏற்பட்டால் உடனடியாக தகுந்த மருத்துவரிடம் பரிசோதித்து சிகிச்சை பெறுவது அவசியம் என தெரிவித்தார்.