March 3, 2023 தண்டோரா குழு
கோவை மாநகராட்சி வ.உ.சி மைதானத்தில் வரும் 5ம் தேதி முதல் 12ம் தேதி வரை நடைபெறவுள்ள தேசிய அளவிலான மகளிர் சுய உதவிக்குழுக்கள் பொருட்களின் சாராஸ் கண்காட்சியினை தமிழக இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அவர்கள் திறந்து வைக்க உள்ளார்.
இந்நிகழ்ச்சியில் மின்சாரத்துறை அமைச்சர் திரு.ஏ செந்தில்பாலாஜி, கலெக்டர், மாநகராட்சி மேயர்,நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள், மாநகராட்சி ஆணையாளர்,உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள்,மகளிர் சுய உதவிக்குழுக்கள் கலந்துகொள்ள உள்ளனர்.
இதுகுறித்து ஆட்சியர் தெரிவித்துள்ளதாவது:
மகளிர் சுய உதவிக் குழுவினர் தயாரிக்கும் பொருட்கள் அனைத்து தரப்பினரையும் சென்றடையும் வகையிலும், அவர்களின் தயாரிப்பு பொருட்களுக்கு உரிய விலை கிடைக்க வேண்டும் என்ற நோக்கத்துடனும் மாநில, மாவட்ட, வட்டார அளவில் மகளிர் சுய உதவிக் குழுக்கள் தயாரிப்பு பொருட்களின் விற்பனைக் கண்காட்சிகளை தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு நிறுவனம் தொடர்ந்து நடத்தி வருகிறது.
ஒன்றிய ஊரக வளர்ச்சி துறையானது கிராமப்புற கைவினைக் கலைஞர்கள் தங்களின் தயாரிப்புப் பொருட்களை காட்சிப்படுத்தவும், விற்பனை செய்யவும் ஏதுவாக பல்வேறு மாநில அரசுகளுடன் இணைந்து நடத்தி வரும் தேசிய அளவிலான சாராஸ் கண்காட்சி, கோவை அவினாசி சாலை வ.உ.சி மைதானத்தில் வரும் 5ம் தேதி முதல் 12ம் தேதிவரை தினமும் காலை 10.30 மணி முதல் இரவு 9.30 மணி வரை நடைபெறவுள்ளது.
இக்கண்காட்சியில் தினந்தோறும் மாலையில் பல்வேறு வகையான கலைநிகழ்ச்சிகள் நடைபெறவுள்ளது. இக்கண்காட்சியினை காணவரும் அனைவருக்கும் நுழைவுகட்டணம் ஏதுமில்லை.இக்கண்காட்சியில் இந்தியாவில் பல்வேறு மாநிலங்களிலிருந்தும் பல்வேறு மாவட்டங்களிலிருந்தும் 200-க்கு மேற்பட்ட சுய உதவிக்குழுக்கள் கைவினைப்பொருட்கள், கைத்தறி புடவைகள், சணல், வாழைநார் மற்றும் துணிப்பைகள், மசாலா பொருட்கள், இயற்கை உணவு பொருட்கள், பனைவெல்லம், திண்பண்டங்கள், எண்ணெய் வகைகள், கால்மிதியடிகள், ஐம்பொன் மற்றும் அலங்கார நகைகள், மூலிகை பொருட்கள், பூஜை பொருட்கள், இயற்கை வலி நிவாரணிகள, மென்பொம்மைகள், மற்றும் கிருமிநாசினிகள் போன்ற பல்வேறு மகளிர் சுய உதவிக்குழுக்களின் உற்பத்தி பொருட்கள் பார்வைக்காகவும், விற்பனைக்காகவும் வைக்கப்படுகின்றது.
இக்கண்காட்சியில் ஊரகப்பகுதிகளில் உள்ள சுய உதவிக்குழுக்கள் தங்களது உற்பத்தி பொருட்களுடன் கலந்து கொள்ள Exhibition.mathibazaar.com/login என்ற இணையதளத்தில் தங்களது விவரங்களை 4 ம் தேதிக்குள் பதிவு செய்ய வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.