February 3, 2017 தண்டோரா குழு'
மாறன் சகோதரர்கள் மீது குற்றம் சாட்டப்பட்டு, பின் விடுவிக்கப்பட்ட ஏர்செல் – மேக்ஸிஸ் வழக்கில் மேல்முறையீடு செய்ய அமலாக்கத் துறைக்கு உச்ச நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.
கடந்த 9 ஆண்டுகாலமாக நடந்து வந்த ஏர்செல்-மேக்சிஸ் வழக்கிலிருந்து தயாநிதி மாறன் மற்றும் கலாநிதி மாறன் ஆகிய இருவர் மீதும் சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுகளுக்கு எந்த முகாந்திரமும், ஆதாரமும் இல்லை எனக் கூறி தில்லி சிறப்பு சி.பி.ஐ., நீதிமன்றம் வியாழக்கிழமை விடுவித்து உத்தரவிட்டது.
இவ்வழக்கில் இருந்து தயாநிதி மாறன் மற்றும் கலாநிதி மாறன் விடுவிக்கப்பட்டதை எதிர்த்து மேல்முறையீடு செய்ய அமலாக்கத் துறை முடிவு செய்தது.
உச்ச நீதிமன்றத்தில் தில்லி சிறப்பு சி.பி,ஐ., நீதிமன்றத்தின் உத்தரவை எதிர்த்து மனு தாக்கல் செய்ய அமலாக்கத் துறை அனுமதி கோரியிருந்தது.
இது குறித்து உச்ச நீதிமன்றம் வெள்ளிக்கிழமை கூறுகையில்,
“இந்த வழக்கில் மேல்முறையீடு செய்ய அனுமதி அளிக்கப்படுகிறது. இந்த மனு தாக்கல் செய்யப்படும் தினத்திலேயே விசாரிக்கவும் தயார் “ என்றது.
இந்த வழக்கில், “சிவா குரூப் புரமோட்டர்ஸ் நிறுவனத்தின் தலைவர் சிவசங்கரன் தனது ஏர்செல் நிறுவனத்தை மலேசியாவைச் சேர்ந்த மேக்சிஸ் நிறுவனத்திற்கு விற்பனை செய்த விவகாரத்தில் விதிமுறைகளை மீறி கோடிக் கணக்கில் பணப்பரிவர்த்தனை நடைபெற்றுள்ளது. இதில், முன்னாள் மத்தியஅமைச்சர் தயாநிதி மாறன், கலாநிதி மாறன், மேக்சிஸ் நிறுவனத்தின் இயக்குநர் அனந்தகிருஷ்ணன் உள்ளிட்டோருக்குத் தொடர்பு உள்ளது” என்று கூறி அவர்கள் மீது சிபிஐ வழக்கு தொடர்ந்தது என்பது குறிப்பிடத்தக்கது.