July 12, 2022 தண்டோரா குழு
கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாற்றுத்திறனாளிகள் மற்றும் திருநங்கைகளுக்கான தனியார் துறை வேலைவாய்ப்பு மற்றும் சுயதொழில் ஆலோசனை வழங்குவதற்கான சிறப்பு முகாம் நடைபெற்றது. இம்முகாமினை ஆட்சியர்சமீரன் நேரில் பார்வையிட்டார்.
கோவை மாவட்ட நிர்வாகத்திடம் பதிவு அட்டை பெற்ற மாற்றுத்திறனாளிகளாக 52 ஆயிரத்து 245 நபர்களும், சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறையின் மூலம் பதிவு பெற்ற மூன்றாம் பாலினத்தவர்களாக 190 நபர்களும் உள்ளனர். மாற்றுத்திறனாளிகள் மற்றும் திருநங்கைகளுக்கு உதவிடும் வகையில் பல்வேறு நடவடிக்கைகள் மாவட்ட நிர்வாகத்தின் மூலம் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
ஒவ்வொரு நபருக்குமான வேலைவாய்ப்பினை ஏற்படுத்துவதன் மூலம் பொருளாதார சமநிலையை ஏற்படுத்த இயலும் என்ற நோக்குடன் நேற்று தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம் நடத்தப்பட்டுள்ளது. இச்சிறப்பு முகாமில் 18 வயதிற்கு மேற்பட்ட 40 வயதிற்குட்பட்டு 8 ஆம் வகுப்பு, 10 ஆம் வகுப்பு, 12 ஆம் வகுப்பு மற்றும் பட்டப்படிப்பு முடித்த மாற்றுத்திறனாளிகள் மற்றும் திருநங்கைகள் முகாமில் கலந்து கொண்டனர்.
இம்முகாமில் கோவை மாவட்டத்தைச் சார்ந்த பல்வேறு தனியார் நிறுவனங்கள் பங்கேற்று ஆட்தேர்வு செய்தனர். அதுபோலவே 113 மாற்றுத்திறனாளிகளும், 23 மூன்றாம் பாலினத்தவர்களும் தனியார் துறையில் பணி வேண்டி இச்சிறப்பு முகாமில் பங்கேற்றனர். இவர்களில் 58 மாற்றுத்திறனாளிகள், 8 மூன்றாம் பாலினத்தவர்கள் என மொத்தம் 66 நபர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
இந்நிகழ்வின்போது மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் வசந்தராம்குமார், மாவட்ட சமூக நல அலுவலர் தங்கமணி மற்றும் அரசு அலுவலர்கள் பலர் கலந்துகொண்டனர்.