November 28, 2022 தண்டோரா குழு
கோவை ஆர்.எஸ்.புரம் உழவர் சந்தையில் மாலை நேர உழவர் சந்தை இயங்கி வருகிறது. இதில் குறைந்த விலையில் மளிகை பொருட்கள் கிடைக்கிறது. இதனை வாங்க மக்கள் அதிக அளவில் ஆர்வம் காட்டி வருகின்றனர்.
அ.தி.மு.க. ஆட்சியில் கண்டுகொள்ளப்படாமல் இருந்த உழவர் சந்தைகள் பல்வேறு வசதிகளுடன் பயன்பாட்டுக்கு கொண்டுவரப்பட்டு தமிழகம் முழுவதும் 100 உழவர் சந்தைகள் செயல்பட துவங்கி உள்ளன.
இந்த சந்தைகள் காலை 6 மணி முதல் மதியம் 1 மணி வரை செயல்படுகிறது. இந்நிலையில் மாலை நேரங்களிலும் உழவர் சந்தைகள் செயல்பட ஏற்பாடு செய்யப்பட்டது. அதன் படி தமிழகம் முழுவதும் மாவட்டத்திற்கு ஒரு உழவர் சந்தை என 37 மாலை நேர உழவர் சந்தைகள் மாலை 4 மணி முதல் இரவு 8 மணி வரை செயல்படுகின்றன.
அதன் படி கோவை ஆர்.எஸ்.புரத்தில் இந்த மாலை நேர உழவர் சந்தை செயல்படுகிறது. காலை நேர உழவர் சந்தையில் காய்கறிகள் விற்பனை செய்வது போல் மாலை நேர உழவர் சந்தையில் மளிகை பொருட்கள் விற்பனை செய்யப்படுகின்றன. உழவர் உற்பத்தியாளர் நிறுவனங்கள் மூலம் சமையல் எண்ணெய் வகைகள், சிறு தானியங்கள், சாமை, தினை மற்றும் அரிசி வகைகள் போன்றவைகள் விற்பனை செய்யப்படுகின்றன.
கோவை மாவட்டத்தில் 24 உழவர் உற்பத்தியாளர் நிறுவனங்கள் உள்ளன இதில் 12 நிறுவனங்களின் பொருட்கள் முதல் கட்டமாக மாலை நேர உழவர் சந்தையில் விற்பனை செய்யப்படுகின்றன. மளிகை பொருட்கள் வெளியில் உள்ள கடைகளை காட்டிலும் உழவர் சந்தையில் விலை குறைவாக கிடைப்பதால் இதனை வாங்க மக்கள் ஆர்வம் காட்டி வருகின்றனர்.