December 19, 2016 தண்டோரா குழு
கோவை மாவட்ட கூடைபந்து கழகம் சார்பில் நடைபெற்ற மாவட்ட அளவிலான ஸ்டேட் சாம்பியன்ஷிப் போட்டியில் பி.எஸ்.சி அணி வெற்றி பெற்று கோப்பையை கைப்பற்றியது.
கோவை மாவட்ட கூடைப்பந்து கழகத்தின் சார்பில் மாவட்ட அளவிலான ஸ்டேட் சாம்பியன்ஷிப் கூடைப்பந்து போட்டிகள் கோவையில் டிசம்பர் 15 முதல் 17 வரை மூன்று நாட்களுக்கு நடைபெற்றது.
இதில் மேற்கு மண்டலத்தை சேர்ந்த கோயம்புத்தூர், நீலகிரி, திருப்பூர், ஈரோடு, சேலம், நாமக்கல், தர்மபுரி ஆகிய மாவட்டங்களை சேர்ந்த ஆகிய 34 ஆண்கள் அணிகள் கலந்து கொண்டன. இந்த போட்டிகள் கோவை, பீளமேடு, பி.எஸ்.ஜி. டெக் கூடைப்பந்து உள்விளையாட்டு அரங்கம் மற்றும் சர்வஜனா பள்ளி வளாகத்தில் நடைபெற்றது.
டிசம்பர் 17 ம் தேதி காலையில் அரையிறுதிப் போட்டி நடைபெற்றது, முதல் போட்டியில் பி.எஸ்.சி. (BSC) அணியை எதிர்த்து ஒய்.எம்.சி.எ. அணி விளையாடியது, இதில் பி.எஸ்.சி. அணி 69 புள்ளிகள் பெற்று பெற்றது. எதிர்த்து விளையாடிய ஒய்.எம்.சி.எ. அணி 65 புள்ளிகள் பெற்றது.
இரண்டாவது போட்டியில் ரெனோவேட்டர்ஸ் அணியை எதிர்த்து யுனைடெட் அணி விளையாடியது. இதில் ரெனோவேட்டர்ஸ் அணி 63 புள்ளிகள் பெற்று வெற்றி பெற்றது. எதிர்த்து விளையாடிய யுனைடெட் அணி 50 புள்ளிகள் பெற்றது.
இறுதிப் போட்டியில் பி.எஸ்.சி அணியை எதிர்த்து ரெனோவேட்டர்ஸ் அணி விளையாடியது. இதில் பி.எஸ்.சி அணி 77 புள்ளிகளை பெற்று வெற்றி பெற்று முதலிடத்தை தட்டி சென்றது.ரெனோவேட்டர்ஸ் அணி 73 புள்ளிகள் பெற்று இரண்டாமிடத்தை பெற்றது.
இதனை தொடர்ந்து நடைபெற்ற பரிசளிப்பு விழாவில் கௌரவ விருந்தினராக தமிழ்நாடு மாநில கூடைப்பந்து கழக, தலைவர், திரு.வி.வி.ஆர். ராஜ் சத்யன் அவர்கள் கலந்து கொண்டார். சிறப்பு விருந்தினராக பி.எஸ்.ஜி. தொழில்நுட்ப கல்லூரியின் முதல்வர் டாக்டர்.ஆர்.ருத்ரமூர்த்தி மற்றும் கோவை மாவட்ட கூடைப்பந்து கழக தலைவர். திரு.ஜி.செல்வராஜ் ஆகியோர் கலந்து கொண்டு போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகளை வழங்கி பாராட்டி பேசினார்.
இந்த போட்டிகளுக்கான ஏற்பாடுகளை கோவை மாவட்ட கூடைபந்து கழகத்தின் சார்பில் துணைத் தலைவர் திரு.டி.பழனிச்சாமி, செயலாளர், திரு.ஆர்.சிரில் இருதயராஜ் மற்றும் சங்க உறுப்பினர்கள் செய்து இருந்தார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.