November 29, 2022 தண்டோரா குழு
கோவை கிளை இந்திய தர நிர்ணய அமைவன (பி.ஐ.எஸ்) தலைமை அதிகாரி கோபிநாத் அறிவுறுத்தலின் படி, இணை இயக்குனர்கள் ரமேஷ், ஜீவானந்தம் உள்ளிட்ட அதிகாரிகள் கோவை அவினாசி சாலையில் கே.கே. லேன் பகுதியில் உள்ள மின்சாதனங்கள் விற்பனை கடையில் அதிரடி சோதனை நடத்தினர்.
அப்போது, முறையான இந்திய தர முத்திரை இல்லாமல் மின்சாதன பொருட்கள் விற்பனையில் ஈடுபட்டதை கண்டறிந்தனர். இச்சோதனையின் போது கணிசமான அளவு முறையான முத்திரை இல்லாத மின் கேபிள்கள் பறிமுதல் செய்யப்பட்டன. அதை தொடர்ந்து இந்திய தர நிர்ணய அமைவன சட்டத்தின் படி அக்கடையின் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டது.
இது குறித்து கோவை கிளையின் இந்திய தர நிர்ணய தலைமை அதிகாரி கோபிநாத் கூறுகையில்,‘
‘இந்திய தர நிர்ணய அமைவன சட்டத்தின் படி இக்குற்றத்திற்கு அதிகபட்ச தண்டளையாக ரூ.2 லட்சம் வரை அல்வது 2 வருட சிறை விதிக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது. குக்கர், எல்பிஜி அடுப்புகள், சிமெண்ட், டி.எம்.டி கம்பி, மின் கேபிள்கள், போன்ற நுகர்வோர் தயாரிப்புகளில் இந்திய தர நிர்ணய அமைவனத்தின் முத்திரை இல்லாமல் விற்பனை மேற்கொள்ளப்பட்டால் அதை பற்றிய தகவல்களை பொதுமக்கள் தொலைபேசி : 0422-2240141, 2249016, 2245984 என்ற எண்களில் தெரிவிக்கலாம்.
மேலும் பி.ஐ.எஸ். முத்திரையின் உண்மையான தன்மை குறித்த எந்த தகவலும் பி.ஐ.எஸ். உரிமம் எண்ணை, BIS CARE மொபைல் அப்ளிகேஷனில் உள்ளீடு செய்து அறிந்து கொள்ளலாம். இதற்கான செயலியை ப்ளே ஸ்டோரிலிருந்து டவுன்லோட் செய்து கொள்ளலாம்’’ என்றார்.