September 14, 2022 தண்டோரா குழு
இது குறித்து தென்னிந்திய பஞ்சாலைகள் சங்கத்தின் (சைமா) தலைவர் ரவி சாம் கூறியிருப்பதாவது:
தற்போது உயர்த்தப்பட்டுள்ள மின்கட்டண உயர்வால், மின்சாரத்தை அதிகம் உபயோகிக்கும் ஜவுளித் தொழிலின் போட்டித்திறன் பாதிக்கப்பட்டுள்ளது. மூலப்பொருட்களான பருத்தி மற்றும் செயற்கை இழைகள் உள்ள குஜராத் மற்றும் மராட்டியம் போன்ற மாநிலங்களுடன் ஒப்பிடுகையில் தமிழக ஜவுளித் தொழில் ஏற்கனவே தனது போட்டி திறனை இழந்துள்ளது. இதனால், நவீனமயமாக்கல், திறன் விரிவாக்கம் மற்றும் புதிய முதலீடு செய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
உற்பத்திச் செலவில் 40 சதவீதத்திற்கும் அதிகமாக மின்சாரத்திற்கு செலவு செய்யும் நூற்பாலைகள் மற்றும் நெசவு ஆலைகள், திருந்தப்பட்ட மின் கட்டணத்தால் போட்டியிடும் திறன் பாதிக்கப்பட்டுள்ளது. ஒரு கிலோ கிராம் நூல் உற்பத்திக்கு சாசரியாக ஐந்து யூனிட் மின்சாரம் தேவைப்படுவதால், ஜவுளித் தொழிலுக்கான தோரயமான நிகர் மின் கட்டண உயர்வு யூனிட்டுக்கு ரூ.1 ஆக இருப்பதால், நூல் விலை கிலோவுக்கு ரூ.5 வரை அதிகரிக்கும். இதன் காரணமாக நூலை பயன்படுத்தும் துறைகளான விசைத்தறி, கைத்தறி, ஆடை மற்றும் படுக்கை விரிப்பு ஜவுளிகள் பாதிக்கப்படும். 25 ஆயிரம் கதிர்கள் கொண்ட நூற்பாலைக்கு ஆண்டு ஒன்றுக்கு ரூ.1.2 கோடி வரை மீன் கட்டணம் அதிகரிக்கும்.
மின் கட்டண உயர்வை நிலைமை சீரடையும் வரை ஒத்தி வைத்திருக்கலாம். பீக் ஹவர்ஸ்களுக்கான கூடுதல் கட்டணம் மற்றும் இரவு நேரத்திற்கான சலுகையை விஞ்ஞான அடிப்படையில் தீர்மானிக்க வேண்டும். மின் கட்டண உயர்வால் மரபுசாரா எரிசக்தி துறைகளில் புதிய முதலீடுகள் வருவது தடுக்கப்படும்.
தமிழகத்தில் ஜவுளித் தொழிலின் உலகளாவிய போட்டித்தன்மையை நிலைநிறுத்தவும், ஆண்டுக்கு ஆண்டு கட்டணம் அதிகரிப்பதைத் தவிர்க்கவும், டிமாண்ட் கட்டணம், விலிங் கட்டணம், டிரான்ஸ்மிஷன் கட்டணம் ஆகியவற்றைக் குறைக்கவும், பீக் ஹவருக்கு இணையாக இரவு நேர சலுகையை அதிகரிக்க அரசு பரிசீலிக்க வேண்டும். 6 சதவீத உச்சவரம்புடன் கூடிய ஆண்டுக்கு ஆண்டு அதிகரிப்பு என்பதை தவிர்த்து மாநிலத்தில் புதிய முதலீடுகள் வருவதை ஊக்குவித்து தமிழகம் புதிய முதலீடுக்கான கவர்ச்சிகரமான இடமாக மாற்ற வேண்டும்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.