November 25, 2022 தண்டோரா குழு
மின்கட்டண உயர்வை தமிழக அரசு கைவிட வலியுறித்தி கோவை பவர் ஹவுஸ் டாட்டாபாத்தில் தொழில் கூட்டமைப்பின் சார்பில் தொழில்முனைவோர்கள் உண்ணாவிரதம் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.மேலும் 25 ஆயிரம் சிறு குறு தொழில்கூடங்கள் இன்று அடைக்கப்பட்டும் போரட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இதுகுறித்து கோவை தொழில் அமைப்புகளின் கூட்டமைப்பு நிர்வாகிகள் நிருபர்களுக்கு பேட்டியளித்தனர்.
அப்போது அவர்கள் கூறியதாவது:-
இந்தியாவின் முதுகெழும்பாக உற்பத்தி துறையில் சிறந்து விளங்கும் தொழில்களாக குறு சிறு தொழில்கள் இருந்து வருகிறது. இந்த உற்பத்தி மூலம் நாடு முழுமையும் பல கோடி மக்களுக்கு வேலை வாய்ப்புகள் வழங்கி வருகிறோம், மத்திய மாநில அரசுகளின் சுமை குறைக்கவும், வேலையில்லா திண்டாட்டத்தை போக்கும் வீதமாக தொழில் துறை வேலை வாய்ப்புகளை வழங்கி வருகின்றன.
குறு சிறு தொழில் நடத்துபவர்கள் கடந்த 2 1/2 வருடங்களாக கொரோனா தொற்று மூலப்பொருள் விலை ஏற்றம் காரணங்களால் கடுமையான பொருளாதார நெருக்கடிகளை சந்தித்து வரும் நிலையில் தமிழக மின்சார ஒழுங்கு முறை ஆணையம் மின் கட்டண உயர்வு சம்மந்தமாக கோவை,மதுரை,சென்னையில் கருத்து கேட்பு கூட்டம் நடத்தியது.இந்த கூட்டத்தில் பங்கு எடுத்த அனைவரும் மின்கட்டண உயர்வை ஏற்ற கூடாது என்றும் தற்போது உள்ள சூழ்நிலையில் மின்கட்டணம் உயர்த்தினால் தமிழகத்தில் தொழில்கள் கடுமையான பாதிப்புகளை சந்திக்கும் என்ற கருத்தை தெரிவிக்கப்பட்டது, தொழில் முனைவோர்களின் வேண்டுகோள்களுக்கு செவி சாய்க்காமல் மின்கட்டணத்தை உயர்த்தினார்கள், குறு சிறு தொழில்கள் முடங்கும் அளவிற்கு மின்கட்டணத்தை 60 சதம் முதல் 70 சதம் வரை உயர்த்தி உள்ளனர்.
இந்த நிலையில் தொழில் துறையினர் தமிழக அரசை குறு சிறு தொழில்களை பொறுத்தவரை மின்சார வாரியம் அறிவித்து உள்ள இந்த உயர்வு தொழில் முனைவோர்கள் 8 சதம் 10 சதம் கூட லாபம் இல்லாமல் தொழில் செய்து வரும் நிலையில் இந்த கட்டண உயர்வு தமிழகத்தின் அடையாளமான குறு சிறு தொழில்களை அழித்து விடும். இந்த வகையான கட்டண உயர்வை தமிழக அரசு கைவிட வலியுறித்தி இன்று கோவை பவர் ஹவுஸ் டாட்டாபாத்தில் தொழில் கூட்டமைப்பின் சார்பில் காலை 10 மணி முதல் மாலை 5.30 மணி வரை உண்ணாவிரதம் இருக்கிறோம்.
அதுபோல் இன்றைய தினம் தொழில் முனைவோர்கள் ஒருநாள் கதவு அடைப்பு செய்துள்ளனர்.இவ்வாறு அவர்கள் அளித்த பேட்டியில் கூறினர். இந்த போராட்டங்களில் 18 தொழில் அமைப்புகளை சேர்ந்த நிர்வாகிகள் பங்கேற்றனர்.