March 23, 2016 வெங்கி சதீஷ்
கடந்த ஒரு மாதத்திற்கு முன் சமத்துவ மக்கள் கட்சியின் முக்கிய நிர்வாகி பிரிந்து சென்றார். இதற்குக் காரணம் அ.தி.மு.க தான் என நினைத்த சரத்குமார் அந்த அணியில் இருந்து பிரிந்து சென்றார். பின்னர் பா.ஜ.க தேர்தல் பொறுப்பாளரான பிரகாஷ் ஜவதேகருடன் பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது அவர் பா.ஜ.க கூட்டணியில் சேர்வார் என எதிர்பார்க்கப்பட்டது.
ஆனாலும் மவுனம் நிலவி வந்த நிலையில் இன்று தே.மு.தி.க மக்கள் நலக் கூட்டணியில் இணைந்ததை முன்னிட்டு பல அரசியல் கூட்டணி பேச்சுவார்த்தைகள் நடைபெற்றன. இந்நிலையில் இன்று மாலை திடீரென போயஸ்கார்டன் வந்த சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமார். முதல்வர் ஜெயலலிதாவைச் சந்தித்து வரும் சட்டமன்ற தேர்தலில் தங்களது கட்சியின் ஆதரவைத் தெரிவித்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர் ஆதரவைத் தெரிவித்துள்ளோம், போட்டியிடும் தொகுதிகள் குறித்து விரைவில் முடிவெடுக்கப்படும் எனத் தெரிவித்தார்.
இது குறித்து பேசிய அரசியல் விமர்சகர்கள் சரத்குமார் நடிகர் சங்க தலைவராக இருந்தபோது செய்த முறைகேடுகள் குறித்து தற்போதுள்ள நடிகர் சங்க நிர்வாகிகள் காவல்துறையில் புகார் கொடுத்துள்ளனர். அது எந்த நேரத்திலும் கைது வரைகூட போகலாம் என நினைக்கிறார். எனவே தற்போதுள்ள நிலையில் தன்னை காப்பாற்ற அ.தி.மு.கவால் மட்டுமே முடியும் என்ற ஒரே காரணத்தால் தற்போது மீண்டும் அ.தி.மு.கவிற்கு ஆதரவு தெரிவித்துள்ளார் எனக் கருத்து தெரிவித்துள்ளனர்.