December 14, 2017 தண்டோரா குழு
மீனவர்களுக்கு தனி அமைச்சகம் அமைக்க காங்கிரஸ் வலியுறுத்தும் என ராகுல்காந்தி கூறியுள்ளார்.
ஒக்கி புயலால் கன்னியாகுமரி மாவட்ட மீனவர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டனர். ஏராளமான மீனவர்கள் மாயமானார்கள். இந்நிலையில், புயல் பாதிப்புகளை பார்வையிட ராகுல் கன்னியாகுமரி வந்தார். தூத்தூர் மீனவ மண்டலத்திற்குட்பட்ட 8 கிராம மக்களை ராகுல் சந்தித்துள்ளார். ராகுலுடன் தமிழக காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசரும், சட்டமன்ற காங்கிரஸ் தலைவர் ராமசாமி, காங்கிரஸ் எம்.எல்.ஏ.விஜயதாரணியும் உடன் இருந்தனர். சின்னத்துறை பகுதியில், புயலில் மாயமானவர்கள் மற்றும் பலியான மீனவர்களின் குடும்பத்தினரை சந்தித்து அவர்களின் குறைகளை கேட்டறிந்த ராகுல் அவர்களுக்கு ஆறுதல் கூறினார். அப்போது, தங்களது குறைகள் குறித்து ராகுலிடம் மனுவாகவும் பெண்கள் கொடுத்தனர்.
பின்னர் மீனவர்கள் மத்தியில் பேசிய ராகுல் காந்தி,
தவிர்க்க முடியாத காரணங்களினால் முன்னரே என்னால் வர முடியவில்லை. உடனே வராததற்கு வருத்தப்படுகிறேன். ஒக்கி புயல் பல குடும்பத்திற்கு மிகப்பெரிய சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மீனவர்கள், விவசாயிகள் கடினமான சூழ்நிலை சந்திக்கின்றனர். நாடு முழுவதும் மீனவர்கள் சிரமப்படுகின்றனர். புயல் பாதிப்பு அடிக்கடி உங்களை துயரப்படுத்துகிறது. புயலில் உறவினர்களை இழந்து வாடுபவர்களுக்காக வருத்தப்படுகிறேன். எந்தெந்த வகையில் உதவ முடியுமோ அந்தளவிற்கு உதவ தயாராக உள்ளேன் என்றார்.
மேலும், எதிர்க்கட்சியாக இருந்தாலும் உங்களுக்காக குரல் கொடுப்போம். தமிழக அரசாக இருந்தாலும், மத்திய அரசாக இருந்தாலும், காங்கிரஸ் சார்பில் அழுத்தமான குரல் கொடுப்போம். மீனவர்களுக்காக தனி அமைச்சகம் வேண்டும் என காங்கிரஸ் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது. கஷ்டமான நேரத்தில் உங்களுக்காக அமைச்சர் இருந்தால், அவர் உங்களுக்காக போராடுவார். இந்த விஷயத்திற்காக பார்லிமென்டில் குரல் கொடுப்போம் என்றார்.