June 27, 2017
தண்டோரா குழு
எதிர்க்கட்சிகள் சார்பில் ஜனாதிபதி வேட்பாளராக நிறுத்தப்பட்டுள்ள முன்னாள் சபாநாயகர் மீரா குமார், நாளை தனது வேட்பு மனுவை தாக்கல் செய்ய உள்ளார்.
இது தொடர்பாக தில்லியில் அவர் அளித்த பேட்டியில்,
“எதிர்க்கட்சிகள் என்னை ஒருமனாக தேர்வு செய்துள்ளதற்கு நான் நன்றி தெரிவித்து கொள்கிறேன்.
ஜனநாயக மதிப்புகள், வெளிப்படைத் தன்மை, வறுமை ஒழிப்பு, ஜாதி ஒழிப்பு உள்ளிட்ட அரசியல் கோட்பாடுகளை முன் வைத்தே தேர்தலை சந்திக்கிறோம்.இரண்டு தலித் வேட்பாளர்களுக்கு இடையே ஜனாதிபதி தேர்தல் நடைபெறுவதாக பார்க்கப்படுகிறது.
எதிர்க்கட்சிகள் பொதுவான கொள்கை அடிப்படையில் ஒன்று சேர்ந்துள்ளன. அனைத்து கட்சிகளும் எனக்கு ஆதரவு அளிக்க வேண்டும்.
நான் லோக்சபா சபாநாயகராக இருந்த போது, எனது பணியை அனைவரும் பாராட்டியுள்ளனர். ஒரு தலைபட்சமாக நடந்து கொண்டதாக யாரும் புகார் கூறவில்லை.ஜனாதிபதி தேர்தலை தலித்களுக்கு இடையிலான மோதலாக மாற்ற வேண்டாம்.
மேலும் குஜராத் மாநிலத்தின் சபர்மதி ஆசிரமத்தில் இருந்து எனது பிரச்சாரத்தை தொடங்க உள்ளேன்”. இவ்வாறு அவர் கூறினார்.