July 7, 2016 தண்டோராக் குழு
சுவாதி கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட ராம் குமார் காவல்துறையின் பிடியிலிருந்து தப்பிக்க தற்கொலைக்கு முயன்றதில் கழுத்தில் ஏற்பட்ட வெட்டுக் காயத்திற்காக மருத்துவ மனையில் தீவிர சிகிச்சை பெற்றார்.
அதன் பின்னர் சிறை வாசத்தைத் தவிர்க்க ஜாமீன் கோரியுள்ளார்.ஜாமீன் பெற்றுத்தர வழக்கறிஞர் கிருஷ்ணமூர்த்தி வாதாடிய நிலையில் நீதிபதி மனுவை ஒத்திவைத்துள்ளார்.
இது இவ்வாறிருக்க குற்றவாளியாகக் கருதப்படும் ராம்குமாருக்காக வாதாடிய வழக்கறிஞர் கிருஷ்ணமூர்த்தி முகநூலில் பொது மக்களின் கடுமையான விமரிசனத்திற்கு உள்ளானார்.
தனது செயலை நியாயப் படுத்தும் விதமாக கிருஷ்ணமூர்த்தி தனது கருத்தையும் பதிவு செய்துள்ளார்.
தொழிலுக்குப் புதிதாக வரும் வழக்கறிஞர்களுக்கு உதவி செய்யும் வகையில் பல வழக்குகளைத் தான் வாதாடியுள்ளதாவும் ,இதற்கு இளம் வழக்கறிஞர்களை உயர்த்துவதே நோக்கம் என்றும் ,ராம்குமார் வழக்கில் தான் நேரிடையாக சம்பந்தப்படவில்லை,சக தோழருக்கு ,அதுவும் ஜாமீன் வழக்கில் மட்டுமே உதவுவதற்காக வாதாடியதாகவும் கூறியுள்ளார்.
35 வருடங்களாக த் தனது வருமானத்தில் பாதிப் பங்கை கல்விக்கூடங்களுக்கும்,கிறிஸ்துவ மற்றும் இந்து கோயில்களுக்கும் செலவழித்துள்ளதாகவும் ,தனது பகுதியில் உள்ள இஸ்லாமிய ப் பெண்களின் உரிமைக்காகப் பாடுபடும் ஒரே வழக்கறிஞர் தான் எனவும் தெரிவித்துள்ளார்.
நலிந்த குடும்பத்தைச் சேர்ந்தவர்,ராம்குமார் என்ற காரணத்தினாலும்,தாழ்த்தப்பட்டோர் உரிமைக்காக க் குரல் கொடுக்கவேண்டும் என்பதனாலும் இந்த வழக்கை வாதாட ஒப்புக் கொண்டுள்ளதாகக் கூறியுள்ளார்.
மேலும் இதுவரை தான் எந்த பலாத்கார வழக்களிலும் வாதாடியதில்லை,காதலுக்கு எதிரான வழக்கை மட்டுமே கையாண்டுள்ளதாகவும்,கூறியுள்ளார்.
இந்த வழக்கை சாதி, இன, மத அடிப்படையில் உணர்ச்சிபூர்வமாக அணுகுவது தவறு என்றும் ,இன்னும் சொல்லப்போனால் தனது மருமகள் ஒரு உயர் சாதியைச் சேர்ந்த பெண்மணியே என்றும் முகநூலில் பதிவு செய்துள்ளார்.
எவ்வாறாயினும் தன்னுடைய வேலை பளு காரணமாக இவ்வழக்கிலிருந்து விலக தான் முடிவு செய்துள்ளதாகத் தெரிவித்துள்ளார்.
ஆனால் இதன் பின்னணி முகநூல் கண்டனங்களே என பலரும் கருத்துத் தெரிவித்துள்ளனர்.