March 15, 2017 தண்டோரா குழு
ஆர்.கே. நகர் தொகுதி இடைத்தேர்தலில் வெற்றி பெற்றால் தமிழக முதலமைச்சராகும் எண்ணம் நிச்சயம் இல்லை என்று அ.தி.மு.க. துணைப் பொதுச் செயலாளர் டி.டி.வி. தினகரன் கூறியுள்ளார்.
சென்னையில் நடந்த அ.தி.மு.க. ஆட்சிமன்றக் குழுக் கூட்டத்தில் ஆர்.கே. நகர் தொகுதி வேட்பாளராக டி.டி.வி. தினகரன் புதன்கிழமை அறிவிக்கப்பட்டார்.
பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது;
“சென்னை ஆர்.கே. நகர் தொகுதியின் அ.தி.மு.க. வேட்பாளராக நான் தேர்வு செய்யப்பட்டுள்ளேன். இதற்காக, ஆட்சிமன்றக் குழுவுக்கு எனது நன்றி.
ஆர்.கே. நகரில் அ.தி.மு.க-வின் இரட்டை இலை சின்னத்தில் போட்டியிடவுள்ளேன். இந்தத் தேர்தலில் மட்டுமல்ல, இனிவரும் அனைத்துத் தேர்தல்களிலும் இரட்டை இலை சின்னம் எங்களுக்கு தான்.
தேர்தலில் நிச்சயமாக அ.தி.மு.க. தொண்டர்கள் மற்றும் மக்கள் பேராதரவோடு நான் வெற்றி பெறுவேன். 50,000 வாக்குகள் வித்தியாசத்தில் அ.தி.மு.க. வெற்றி பெறும்.
தேர்தலில் வெற்றி பெற்றால் தமிழக முதலமைச்சராகும் எண்ணம் நிச்சயம் இல்லை. தமிழக முதலமைச்சர் எடப்படி பழனிச்சாமி தலைமையில்தான் ஆட்சி நடைபெறும்.
வரும் 23-ம் தேதி வேட்புமனு தாக்கல் செய்கிறேன். ஆர்.கே. நகரில் வெற்றி பெற்று மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா அறிவித்த நலத்திட்டங்கள் அனைத்தையும் அத்தொகுதியில் நிறைவேற்றுவேன். தொகுதி வளர்ச்சிக்காகப் பாடுபடுவேன். ஜெயலலிதா வெற்றி பெற்ற தொகுதியில் போட்டியிடுவதைப் பெருமையாக கருதுகிறேன்.
ஆர்.கே. நகர் தொகுதி இடைத்தேர்தலில் தி.மு.க. மட்டுமே அ.தி.மு.க-வுக்குப் போட்டி. முன்னாள் முதலமைச்சர் ஒ. பன்னீர்செல்வம் அணி தேர்தலுக்குப் பின்னர் முடங்கிப் போய்விடும்.
பன்னீர்செல்வம் ஒரு சிறந்த நடிகர் என்பதை நிரூபித்து வருகிறார். இத்தேர்தலில் ம.தி.மு.க., தே.மு.தி.க. ஆகிய கட்சிகள் அ.தி.மு.க-வுக்கு ஆதரவு அளிக்க வேண்டும் என வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன்”.
இவ்வாறு டி.டி.வி. தினகரன் கூறினார்.