April 25, 2017 தண்டோரா குழு
அ.தி.மு.க.,வில் பதவியை ஏலம் போடும் நிலை உருவாகியுள்ளது, முதல்வர் பதவிக்குரிய தகுதி, திறமை தற்போதைய முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு இல்லை என்று திருவாரூரில் கைது செய்யப்பட்டுள்ள சட்டப்பேரவை எதிர்க்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.
இது குறித்து அவர் கூறியதாவது
“தமிழகம் முழுவதும் போராட்டம் நடத்திய எதிர்க்கட்சியினர், விவசாயிகள் கைது
செய்யப்பட்டனர். திருவாரூரில் என்னையும் மற்ற தலைவர்களையும் காவல்துறையினர் கைது செய்துள்ளனர். எங்களை 4 கிலோ மீட்டர் நடக்க வைத்ததால் மிகப்பெரிய பேரணியே நடந்து விட்டது. விவசாயிகளுக்கு ஆதரவாக எதிர்க்கட்சிகள் நடத்தும் போராட்டம் மிகப்பெரிய வெற்றியடைந்துள்ளது.
விவசாயிகளின் போராட்டம் பற்றி மத்திய அமைச்சர் வெங்கையா நாயுடு தவறான தகவல் கூறியிருக்கிறார். அது வங்கிக் கடனை மத்திய அரசு தள்ளுபடி செய்வதில்லை என்று தவறான தகவலை கூறியிருக்கிறார்.
வி.பி.சிங் பிரதமராக இருந்த போது விவசாயிகளின் வங்கிக்கடன் 10,000 கோடி தள்ளுபடி செய்யப்பட்டது. விவசாயிகளின் வங்கிக்கடனை ரத்து செய்யாவிட்டால் மீண்டும் மிகப்பெரிய போராட்டம் நடத்தப்படும்.
அதிமுக அரசு குடிநீர் பிரச்சனையை தீர்க்காமல் மதுக்கடையைத் திறக்க ஆர்வம்
காட்டுகிறது. அரசியலுக்கு அப்பாற்பட்டு தமிழகம் முழுவதும் முழு அடைப்பு போராட்டம் நடைபெறுகிறது.
அ.தி.மு.க.,வில் பதவியை ஏலம் போடும் நிலை உருவாகியுள்ளது. தற்போது அ.தி.மு.க.,வில் யார் முதலமைச்சர் என்ற கட்டப்பஞ்சாயத்து நடந்து கொண்டிருக்கிறது. முதல்வர் பதவிக்குரிய தகுதி, திறமை தற்போதைய முதல்வர் பழனிசாமிக்கு இல்லை.”
இவ்வாறு ஸ்டாலின் கூறியுள்ளார்.