December 30, 2016 தண்டோரா குழு
இந்தியாவிலேயே முதல் முறையாக மேற்கு வங்கத்தில் கல்லூரி முதல்வராக நியமிக்கப்பட்ட திருநங்கை மனாபி பண்டோபாத்யாய பதவி விலகிவிட்டார்.
இந்தியாவிலேயே முதல் முறையாக மேற்கு வங்க மாநிலம் நாடியா மாவட்டத்தில் உள்ள கிருஷ்ணகர் பெண்கள் கல்லூரியின் முதல்வராக திருநங்கை மனாபி பண்டோபாத்யாய 2015ம் ஆண்டு நியமிக்கப்பட்டார். இதற்காக நாடு முழுவதுமிருந்து அவருக்கு வாழ்த்துகள் குவிந்தன.
கல்லூரி முதல்வராக நியமிக்கப்பட்டு, 19 மாதங்களில் அந்தப் பதவியிலிருந்து மனாபி பண்டோபாத்யாய விலகிவிட்டார். கல்லூரி ஊழியர்கள் மற்றும் மாணவிகளின் ஒத்துழைப்பு கிடைக்காததால், தான் பதவி விலகுவதாக அவர் மன வருத்தத்துடன் அறிவித்தார்.
இது குறித்து மனாபி கூறியதாவது:
இக்கல்லூரியின் முதல்வர் பொறுப்பில் இருந்ததை ஒரு புது மணப்பெண்ணைப் போன்ற நிலையில் இருப்பதாக உணர்கிறேன். திருமணமாகி வீட்டுக்கு வரும் புதுப்பெண்ணை வரவேற்பதும், ஒரு வருடத்துக்குப் பிறகு, அவளைக் கொடுமை செய்து எரித்துக் கொள்வார்கள்.
ஏராளமான நம்பிக்கையோடு உள்ளே வந்தேன். ஆனால், தொடர்ச்சியான போராட்டங்களால் நான் சோர்வடைந்துவிட்டேன். கல்லூரி ஆசிரியர்களும், மாணவியரும் என்னை முற்றுகையிடுவது, என்னை எதிர்த்துப் போராட்டம் செய்வது போன்ற செயல்களால் விரக்தி அடைந்தேன். தற்போது தோற்றுவிட்டதாக உணர்கிறேன் என்று வேதனையுடன் கூறினார்.
மனாபி பொறுப்பேற்ற பிறகு, கல்லூரியில் ஏற்பட்ட சில பிரச்னைகள், கல்லூரிப் பேராசிரியர்கள், மாணவிகளின் போராட்டம் போன்றவை இவரது பதவி விலகலுக்குக் காரணமாக இருக்கலாம் என கூறப்படுகிறது. அவர் தனது பதவி விலகல் கடிதத்தைக் கடந்த டிசம்பர் 23 ஆம் தேதி அஞ்சல் மூலம் நிர்வாகத்துக்கு அனுப்பிவிட்டார்.
மேலும், பெண்ணாக மாறுவதற்கான அறுவைச் சிகிச்சையை 2003ம் ஆண்டு செய்து கொண்ட மனாபி, அதே மாவட்டத்தில் விவேகானந்தா சடோபார்ஷிகி மகாவித்யாலா கல்லூரியில் வங்க மொழிப் பேராசிரியராக பணியாற்றி வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
என் மீது குற்றச்சாட்டு இருநதால் விசாரணை நடத்தட்டும். ஆனால், கல்லூரியின் சூழல் பாழாகும் வகையில் செயல்படுவது ஏன் கல்லூரிக்கு தேசிய தர நிர்ணயக் குழு (NAAC) வந்தபோது, கல்லூரிக்காகக் கடுமையாக உழைத்தேன். அதை ஆய்வு செய்த குழுவினர் சான்றிதழ் அளித்தனர். கல்லூரியிலிருந்து போகவேண்டாம் என்று பல மாணவியர் வலியுறுத்தினர்.