April 5, 2023 தண்டோரா குழு
பிரதமர் வருகை முதுமலை புலிகள் காப்பகத்தில் 6ம் தேதி முதல் 9ம் தேதி வரை முதுமலையில் உள்ள அனைத்து ஓய்வு விடுதிகள், துயிலகங்கள், உணவகம், சிற்றுண்டியகம் மூடப்படுகிறது.
புலிகள் பாதுகாப்பு திட்டத்தின் 50-வது ஆண்டு பொன்விழா நாடு முழுவதும் உள்ள 53 புலிகள் காப்பகத்தில் கொண்டாடப்பட உள்ளது. இதனையொட்டி இந்தியாவில் உள்ள புலிகள் காப்பகங்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி நேரில் சென்று பார்வையிட உள்ளார்.
இதனை அடுத்து பிரதமர் நரேந்திர மோடி வரும் 9-ம் தேதி கர்நாடக மாநிலம் பந்திப்பூர் புலிகள் சரணாலயத்திற்கு செல்கிறார். அங்கிருந்து அதன் அருகே நீலகிரி மாவட்டத்தில் உள்ள முதுமலை புலிகள் காப்பகத்துக்கும், வயநாட்டில் உள்ள புலிகள் காப்பகத்துக்கும் செல்ல திட்டமிட்டுள்ளார்.
முதுமலைக்கு வரும் பிரதமர் மோடி ஆஸ்கர் விருது பெற்ற யானைகள் ஆவணப்படத்தில் நடித்த பொம்மன், பெள்ளி தம்பதியை நேரில் சந்தித்து பாராட்ட உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.தற்போது பிரதமர் வருவதாக வெளியான தகவலை அடுத்து, நீலகிரி மாவட்டம் முதுமலை தெப்பக்காடு பகுதியில் பராமரிப்பு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. பாதுகாப்பு ஏற்பாடுகளும் தீவிரம் அடைந்துள்ளன.
இதனிடையே,பிரதமர் நரேந்திர மோடி வரும் 9ம் தேதி தெப்பக்காடு யானைகள் முகாமிற்கு வருகை புரிவதையொட்டி பாதுகாப்பு காரணங்களுக்காக முதுமலை புலிகள் காப்பகத்தில் 6ம் தேதி முதல் 9ம் தேதி வரை முதுமலையில் உள்ள அனைத்து ஓய்வு விடுதிகள்,துயிலகங்கள்,உணவகம், சிற்றுண்டியகம் மூடப்படுகிறது.
மேலும் வன விலங்குகளை காணுவதற்கான வாகன சவாரியும் 7ம் தேதி முதல் 9ம் தேதி வரை தற்காலிகமாக நிறுத்தப்படுகிறது என முதுமலை புலிகள் காப்பக கள இயக்குநர் வெங்கடேஷ் அறிவித்துள்ளார்.