March 10, 2017 தண்டோரா குழு
கேரளாவில் சிவசேனா கட்சிக்கு எதிராக போராட்டக்காரர்கள்முத்தம் கொடுத்து தங்கள் எதிர்ப்பை பதிவு செய்துள்ளனர்.
மகளிர் தினத்தன்று கேரள மாநிலம் கொச்சியில் உள்ள மெரைன் ட்ரைவில் சிவசேனா “குடைக்குக் கீழேயான காதலுக்கு முடிவு கட்டும் போராட்டம்” என்ற பெயரில் போராட்டம் நடத்தியது.அப்போது, அங்கு இளம் ஜோடிகள் அமர்ந்து பேசிக் கொண்டிருந்தனர். அவர்களை சிவ சேனா தொண்டர்கள் சிலர்,அங்கிருந்து விரட்டியது மட்டுமல்லாமல் அடிக்கவும் துரத்தினர்.
இதனை பாதுகாப்பில் பணியில் இருந்த காவல்துறையினரும் தடுக்க முயற்சிக்கவில்லை.இந்த காட்சிகள் அனைத்தும் கேரள தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பாகி கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தின. இதையடுத்து, இச்சம்பவதிற்கு கேரள முதல்வர் பினராய் விஜயன் கடும் கண்டனத்தை தெரிவித்ததோடு, இந்த செயலில் ஈடுபட்ட சிவசேன குண்டர்களை கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர். அதைபோல் இந்த சம்பவத்தை தடுக்க தவறிய காவல் ஆய்வாளர் இடைநீக்கம் செய்யப்பட்டும் அங்கிருந்த காவலர்கள் பணியிடமாற்றமும் செய்யப்பட்டனர்.
இந்நிலையில், சிவசேனாவின் இந்த செயல்களுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில்,கிஸ் ஆப் லவ் போரட்டத்திற்கு முகநூல் வழியாக அழைப்புவிடுக்கப்பட்டிருந்தது.இதனைத் தொடர்ந்து வியாழன்று மெரைன் டிரைவ் பகுதிக்கு வந்திருந்த நூற்றுக்கும் மேற்பட்டோர் ஒருவருக்கொருவர் கட்டிப்பிடித்து முத்தம் கொடுத்துக்கொண்டனர்.இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.