May 17, 2017 தண்டோரா குழு
முத்தலாக் கூற இஸ்லாமிய பெண்களுக்கு அனைத்து உரிமைகளும் உள்ளதாக இஸ்லாமிய வாரியம் உச்சநீதிமன்றத்தில் தகவல் தெரிவித்துள்ளது.
மூன்று முறை தலாக் கூறி மனைவியை விவாகரத்து செய்யும் நடைமுறை முஸ்லிம் மதத்தில் பின்பற்றப்படுகிறது. இதை எதிர்த்து சில இஸ்லாமிய பெண்கள் உச்ச நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளனர். இம்மனு மீதான விசாரணை உச்ச நீதிமன்றத்தில் தலைமை நீதிபதி கெஹர் தலைமையிலான 5 நீதிபதிகள் கொண்ட அமர்வு முன்பு விசாரித்து வருகிறது.
அப்போது நடந்த விசாரணையில் முத்தலாக் முறையை நீதிமன்றம் ரத்து செய்தால் இஸ்லாமியர்களுக்கென தனி சட்டம் கொண்டுவரத் தயார் என மத்திய அரசு தெரிவித்திருந்தது.இதை எதிர்த்து வாதாடிய மூத்த வழக்கறிஞரும், முன்னாள் சட்ட அமைச்சருமான கபில் சிபல், அயோத்தியில்தான் ராமர் பிறந்தார் என்பது எப்படி நம்பிக்கையோ, அதேபோல் முத்தலாக் 1400 ஆண்டுகளாக முஸ்லீம்களால் பின்பற்றப்பட்டு வரும் நம்பிக்கை என்று தெரிவித்தார்.
இந்நிலையில், முத்தலாக் குறித்த 5வது நாள் விசாரணை இன்று நடைபெற்றது. அப்போது, முத்தலாக் முறைக்கு மறுப்பு தெரிவிக்கும் அதிகாரத்தை முஸ்லிம் பெண்களுக்கு அவர்கள் திருமண ஒப்பந்தத்தில் கையெழுத்திடும் போதே வழங்கலாமா? அல்லது திருமணங்களை நடத்திவைக்கும் தலைமை காஜிகளுக்கு இந்த நடைமுறையை பின்பற்றுமாறு அறிவுறுத்தலாமா? என அனைத்து இந்திய முஸ்லிம் தனிநபர் சட்ட வாரியத்திடம் உச்ச நீதிமன்றம் யோசனை கேட்டது.
இதற்கு பதிலளித்த இந்திய முஸ்லிம் தனிநபர் சட்ட வாரியம், இஸ்லாம் மதத்தில் பெண்களும் முத்தலாக் கூறலாம் என தெரிவித்துள்ளது.மேலும் முத்தலாக் சொல்ல முஸ்லிம் பெண்களுக்கு அனைத்து உரிமைகளும் உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது.