April 30, 2022 தண்டோரா குழு
கோவை காவலர் பயிற்சி பள்ளி வளாகத்தில் ஜெயலலிதாவின் உதவியாளர் பூங்குன்றனிடம் காலை முதல் 9 மணி நேரம் நடத்தப்பட்ட விசாரணை முடிவடைந்த நிலையில் நாளையும் விசாரணை தொடர இருப்பதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
கொடநாடு கொலை,கொள்ளை வழக்கு விசாரணையானது தீவிரம் அடைந்துள்ளது. கடந்த சில வாரங்களாக தனிப்படை காவல்துறையினர் இதுவரை விசாரிக்காத நபர்களை அழைத்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.இதன் ஒரு பகுதியாக இன்று முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் உதவியாளர் பூங்குன்றனிடம் விசாரணை நடத்தப்பட்டது.
கோவை காவலர் பயிற்சி பள்ளி வளாகத்தில் மேற்கு மண்டல காவல்துறை தலைவர் சுதாகர் தலைமையில் இந்த விசாரணையானது நடத்தப்பட்டது.காலை 10 மணிக்கு துவங்கிய விசாரணை இரவு 7 மணி வரை 9 மணி நேரம் நீடித்தது.இந்த விசாரணையில் கோடநாடு பங்களா குறித்தும்,அங்கு யாரெல்லாம் அடிக்கடி வருவார்கள் என்பது குறித்தும், அங்கு நடைமுறையிலிருந்த செயல்பாடுகள், பணியாற்றிய நபர்கள் குறித்தும் விசாரணை நடத்தப்பட்டது.
மேலும் கொடநாடு பங்களாவிற்கு மரவேலைப்பாடு,உட்புற அலங்கார பணிகள் செய்ய வரும் சஜீவன் மேற்கொண்ட பணிகள் குறித்தும் விசாரணை நடத்தப்பட்டதாக கூறப்படுகின்றது.பூங்குன்றனிடம் விசாரணை இன்று நிறைவடையாததால் நாளையும் விசாரணை தொடர இருப்பதாக மேற்கு மண்டல காவல் துறை தலைவர் சுதாகர் தெரிவித்தார்.
நாளை காலை மீண்டும் பூங்குன்றனிடம் விசாரணை மேற்கொண்ட பிறகு,அடுத்த கட்டமாக இந்த வழக்கில் தொடர்புடைய சஜீவனின் தம்பி சுனில் உள்ளிட்ட பல்வேறு நபர்களிடம் விசாரணை மேற்கொள்ள தனிப்படை போலீசார் திட்டமிட்டுள்ளனர்.